உலகம்

தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலி.. உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் !

எகிப்து நாட்டில் தலைநகர் கெய்ரோவுக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் ஒன்று இம்பாபா. இங்குள்ள புகழ்பெற்ற தேவாலயத்தில் ஒன்று அபு செஃபைன் தேவாலயம். இங்கு ஏராளமானோர் தினமும் வருகை தருவர்.

இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று காலை வழிபாட்டுக்காக ஏராளமான கிறிஸ்தவர்கள் அபு செஃபைன் தேவாலயத்தில் கூடியுள்ளனர். அப்போது அங்கு வழிபாடு நடந்துகொண்டிருந்தபோது திடீர் என தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ சிறிது நேரத்தில் தேவாலயம் முழுவதும் பரவிய நிலையில், அங்கு இருந்த பொதுமக்கள் அதில் சிக்கிக்கொண்டனர்.

இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தேவாலயத்தில் இருந்த ஏராளமானோரை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

ஆனாலும் இந்த தீ விபத்தில் குறைந்து 41 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் உயிற்பலி அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எகிப்து வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தாக இந்த விபத்து கருதப்படுகிறது. இதற்கு முன்னர் 2021இல் கெய்ரோவின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

Also Read: 2 மாதத்தில் ரூ.1.2 லட்சம் கோடியை இழந்த LIC..30% சரிந்த பங்குகள்.. பாஜக அரசின் முடிவால் நேர்ந்த பரிதாபம்!