உலகம்

தமிழில் அறிக்கை வெளியிட்ட ஆஸ்திரேலிய மாகாண அரசு.. உலகெங்கும் உயரும் தமிழின் பெருமை !

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் பிற மாநில அமைச்சர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம் தெரிந்த அமைச்சர்கள் கூட இந்தியில் பதில் சொல்வதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்வியில் இந்தி, ரயில்வே துறையில் இந்தி என எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்ற கொள்கையை ஒன்றிய அரசு பின்பற்றுவது பிற மாநில மக்கள் இடையே மொழி ரீதியான அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இது தவிர பலம்பெருமை வாய்ந்த தமிழ்நாட்டின் பெருமைகளை மறைப்பதில் ஒன்றிய அரசு தீவிரமாக இருக்கிறது. கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் நடக்கும் ஆய்வு முடிவுகளை வெளிவிட மறுத்த ஒன்றிய அரசு ஆய்வு நடத்த தேவையான நிதி உதவியை கூட மறுத்து வருகிறது.

ஆனால், அதேநேரம் ராமாயண ஆய்வுக்கு பல கோடி ஒதுக்கீடு, இல்லாத சரஸ்வதி நதியை கண்டுபிடிக்க நிதி ஒதுக்கீடு என அழிந்த சமஸ்கிருதத்தை வளர்க்க திட்டமிட்டு வருகிறது.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல ஒன்றிய அரசு எத்தனைதான் மறைத்தாலும் தமிழின் பெருமை உலகெங்கும் பரவி வருகிறது. பல்வேறு நாடுகளின் தமிழ் மொழிக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள விக்டோரியா மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஆன்ட்ருஸ் தனது அரசின் அறிவிப்பு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பதிவை பகிர்ந்துள்ள இணையவாசி ஒருவர், ஆஸ்திரேலியா கூட தமிழின் பெருமையை உணர்ந்து அறிக்கையை தமிழில் வெளியிடுகிறது. ஆனால் இந்திய ஒன்றியம் மட்டுமே தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கிறது என கூறியுள்ளார்.

Also Read: ரயில் நிலைய உதவி மையங்களின் பெயர் இந்தியில் மாற்றம் -ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு பெருகும் கண்டனம் !