உலகம்

இரவு நேர ரயிலில் முரட்டு தூக்கம் .. காலையில் எழுந்ததும் பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி! நடந்தது என்ன?

பிரிட்டனின் புகழ் பெற்ற ரயில்களில் ஒன்று கலிடோனியன் ஸ்லீப்பர் ரயில். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து ஸ்காட்லாந்து நாட்டுக்கு செல்லும் இந்த ரயில் சொகுசு சேவையாகவும் அறியப்படுகிறது.

இந்த ரயிலில் பயணம் செய்யும் நபர்களுக்கு காலையில் டீ, காஃபி மற்றும் காலை உணவுகளும் பரிமாறப்படுகிறது. இந்த ரயிலில் இது வரை இல்லாத விசித்திர நிகழ்வு ஒன்று நடந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜிம் மெட்கால்ஃபே என்ற பயணி ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லன்டன் செல்ல இரவு நேரத்தில் இந்த ரயிலில் ஏறியுள்ளார். ஏறியதும் கடும் அசதி காரணமாக தனக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையில் நன்கு உறங்கியுள்ளார்.

பின்னர், காலையில் டீ, காபி மற்றும் உணவுடன் வந்த ரயில்வே ஊழியர் ஒருவர், ஜிம்மை எழுப்பியுள்ளார். ரயில் லண்டன் ரயில் நிலையம் அருகில் வந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பில் எழுந்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ரயில் அவர் இரவு ஏறிய கிளாஸ்கோ ரயில் நிலையத்திலேயே நின்றுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரயில்வே ஊழியரிடம் விவரத்தை கேட்கும்போது, ரயில் கிளம்பவே இல்லை என்ற தகவலை கூறியுள்ளார். மேலும் அவரை விரைவில் ரயிலை விட்டு வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளார். தனக்கு நேர்ந்த இந்த அனுபவம் தொடர்பாக ஜிம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பின்னர் இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது, அதில் "திடீரென லைனில் அடையாளம் காணப்பட்ட தவறு காரணமாக இப்படி நிகழ்ந்தது. தீவிர வெப்பநிலை நெட்வொர்க் முழு சிக்கல்களை ஏற்படுத்தியதால் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் தங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

Also Read: "இதை செய்தால் உங்களை புலிகள் வேட்டையாடும், யானைகள் மிதிக்கும்" - பா.ஜ.கவுக்கு மம்தா எச்சரிக்கை !