
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.1.2026) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்புத்துறை நிலைய அலுவலர்கள், என மொத்தம் 750 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி ஆற்றிய உரை:-
உங்கள் எல்லோருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளோடு, காவலராக பணி நியமன ஆணைகள் பெற்றிருப்பதற்கான அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுக்களை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
போலீஸ் வேலையில் சேரவேண்டும் என்கின்ற உங்கள் கனவும், அதற்கான உங்கள் முயற்சியும், உழைப்பும் சேர்ந்துதான் உங்களை இந்த நிலைக்கு உங்களையெல்லாம் இங்கே கொண்டு வந்திருக்கிறது. இனிதான் உங்களுக்கான பொறுப்பும், சமூக கடமையும் அதிகமாகிறது.
“போலீஸ் இருக்கிறார்கள், அவர்கள் நம்மை பார்த்துக் கொள்வார்கள்” என்கின்ற நம்பிக்கையில்தான் மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள். நள்ளிரவு, அதிகாலை என்று அனைத்து நேரத்திலும், வேலைக்குச் சென்றுவிட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம், அமைதிப் பூங்கா என்று இந்திய அளவில் எல்லோரும் சொல்கிறார்கள்; முதலீடுகளை மேற்கொள்ள சிறந்த இடம் என்று உலக அளவிலான நிறுவனங்கள் நம்முடைய தமிழ்நாட்டை தேடி வருகிறார்கள் என்றால், அந்த நம்பிக்கையை புதிதாக பணியில் சேர்ந்திருக்கக்கூடிய நீங்களும் காப்பாற்ற வேண்டும்!
தமிழ்நாட்டின் எதிர்காலமே உங்கள் கையில்தான் இருக்கிறது என்கின்ற பொறுப்புணர்வு உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்! உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரத்தை மக்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும்!
ஒரு காவலர் நல்லது செய்கின்ற செய்தி மீடியாக்களில் வரும்போது, ஒட்டுமொத்தமாக அந்தத் துறைக்கே பெருமையை தேடி தருகிறது.
எடுத்துக்காட்டுக்கு ஒன்று சொல்கிறேன்… கடந்த ஆண்டு ராஜேஸ்வரி என்கின்ற ஒரு பெண் காவலர், பெருமழை பேரிடர் காலத்தில், காயமடைந்து, சுயநினைவில்லாமல் இருந்த ஒருவரை தன்னுடைய தோள்களில் சுமந்து கொண்டு சென்று காப்பாற்றினார். அவரை நான் வீட்டிற்கே நேரில் அழைத்து பாராட்டினேன். ஏன் சொல்கிறேன் என்றால், காவலர் பணி மனிதநேயத்துடன் இணைந்தது! வீரத்தின் அடித்தளம் எது தெரியுமா? அன்புதான்!
அதேபோல, மற்றொரு பக்கம், எங்கேயோ ஒரு காவலர் தவறு செய்தாலும், ஒட்டுமொத்த துறை மீதும் மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை அது பாதிக்கும்! அதை உணர்ந்து நீங்கள் ஒவ்வொருவரும் கவனமாக செயல்பட வேண்டும்! செயல்படுவீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்று சொல்வது, வெறும் வார்த்தைகள் அல்லாமல், வெறும் வாசகமாக இல்லாமல், ரியாலிட்டியில் நீங்கள் அதை ப்ரூவ் செய்ய வேண்டும்!
காவலர் என்றால் மக்களுக்கு காட்சிக்கு எளியவர்களாக, கனிவாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய உறுதி, செய்கின்ற வேலையில் தெரிய வேண்டும்! இரும்புக்கரத்தைக் குற்றத்தை தடுப்பதில் பயன்படுத்துங்கள். புகார் வருபவர்களிடம் மரியாதை, புன்னகை, அக்கறை கலந்த கேரக்டராக காட்டுங்கள்.
குறிப்பாக, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும்போது, மிக மிக ஜாக்கிரதையாக கையாளவேண்டும்! சென்சிபிளாக நடந்து கொள்ள வேண்டும்! இந்த துறைக்கு பொறுப்பு வகிக்கின்ற முதலமைச்சராக இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல; 100 சதவிகிதம் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய உத்தரவு!
அதேபோல, போதைப் பொருட்கள் நடமாட்டம், விற்பனையை தடுப்பதிலும் ‘ஜீரோ டாலரென்ஸ்’ என்கிற பாலிசியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்! உங்கள் எல்லோருடைய வீட்டிலும் குழந்தைகள் இருப்பார்கள். யார் பாதிக்கப்பட்டாலும், போதை எனும் ஆபத்து நாளை நம்முடைய வீட்டுக் குழந்தைகளையும் பாதிக்கும் என்று உணர்ந்து, பர்சனல் இன்வால்வ்மெண்டுடன் நீங்கள் செயல்படவேண்டும்!
“நான் இன்சார்ஜாக இருக்கின்ற பகுதியில், என்னை மீறி ஒரு குற்றச்சம்பவம் நடக்க விடமாட்டேன்” என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள்ளே ஒரு ‘ரெசல்யூஷன்’ எடுத்துக்கொள்ள வேண்டும்!
என்னடா, வந்ததிலிருந்து மக்கள் நலனுக்காக மட்டும் சொல்கிறாரே, நம்முடைய நலனுக்கு எதுவும் இல்லையா என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது.
மக்களைக் காக்கின்ற உங்களுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதில் சிலவற்றை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணமான காவலர்களான நீங்கள், உங்கள் ஃபேமிலியுடன் டைம் ஸ்பெண்ட் செய்யவேண்டும் என்பதற்காக, வாரம் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படுகின்றது. காவலர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை இருமடங்காக வழங்கப்பட்டு வருகிறது.

காவலர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுடைய வாழ்க்கைத் துணைக்கும் மெடிக்கல் செக்கப் செய்கிறோம். பெண்களுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனையும் இதில் அடங்கும். +2-வில் அதிக மதிப்பெண் எடுக்கின்ற நம்முடைய டிப்பார்ட்மெண்டில் வேலை பார்ப்பவர்களுடைய குழந்தைகளுக்கு மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகையாக தலா 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
உங்கள் நலனுக்காக பல்வேறு மாவட்டங்களில், காவலர் நல அங்காடிகள் திறக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கூட தென்காசி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய புதிய மாவட்டங்களில் திறந்து வைத்திருக்கிறோம்.
இரவு ரோந்து பணிகளுக்கு செல்லக் கூடியவர்களுக்கு சிறப்புப்படி வழங்கப்பட்டு வருகிறது. பெண் காவலர்களுக்கான WORK – LIFE பேலன்ஸ் குறித்த “ஆனந்தம்” பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவலர், தலைமைக்காவலர், உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட குடிமனை வீடுகளின் அளவு – விகிதாச்சாரப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இன்னும் சில டேட்டாக்களை சொல்கிறேன்... SSLC, +2-வில் டாப் 10-ன்னில் வந்த நம்முடைய காவலர்களின் குழந்தைகள் – 2 ஆயிரத்து 493 பேருக்கு நம்முடைய ஆட்சியில், ஒரு கோடியே 33 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
நம்முடைய அரசு பொறுப்பேற்றதில் இருந்து, 66 துணைக் காவல் கண்காணிப்பாளர்களும், ஆயிரத்து 65 காவல் உதவி ஆய்வாளர்களும், 16 ஆயிரத்து 199 இரண்டாம் நிலைக் காவலர்களும் என்று மொத்தம் 17 ஆயிரத்து 330 நபர்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டு, பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மேலும், 2 ஆயிரம் தீயணைப்பாளர்கள், 129 நிலைய அலுவலர்கள், 366 இரண்டாம் நிலை சிறைக் காவலர்களும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
காவல்துறையில் பணிபுரிந்து மறைந்தவர்களின் வாரிசுகள் 1,532 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கியிருக்கிறோம். தொடர்ந்து, உங்களுடைய நலனுக்காகவும், உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகவும், நம்முடைய அரசில் தேவையானவற்றை செய்து தருவோம்! இரவு பகல் பார்க்காமல், பண்டிகை நாட்களிலும், வார இறுதிநாட்களிலும் கூட நீங்கள் பொறுப்பாக டியூட்டி பார்க்கின்ற நம்பிக்கையில்தான், முதலமைச்சரான நான் தொடங்கி, மாநிலத்தின் கடைக்கோடியில் வசிக்கின்ற சிட்டிசன் வரை அனைவருமே எங்கள் பணிகளை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது! அதனால், இந்த துறையின் முக்கியத்துவம் என்ன? உங்கள் வேலையின் பொறுப்பு என்ன? உங்கள் காக்கி உடையின் மரியாதை என்ன? என்று முழுமையாக உள்வாங்கி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்!
மாநிலத்தின் அமைதியை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும்! சட்டம் ஒழுங்கை சமரசமில்லாமல் நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, நிறைவாக, உங்களுக்கு ஒரு பர்சனல் அட்வைஸ் சொல்ல விரும்புகிறேன். போலீஸ் வேலையில் இருக்கின்ற நீங்கள் தொடர்ந்து உங்கள் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஃபிட்னெஸ் மிகவும் முக்கியம். அதற்கேற்ற உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யுங்கள். அதுமட்டுமல்ல, ஏதாவதொரு ஸ்போர்ட்ஸ்-ல் பங்கெடுத்து விளையாடுங்கள்.
பணி நியமன ஆணைகளை பெற்றுள்ள உங்களுக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!






