உலகம்

இலங்கையில் பொதுமக்களை தாக்கிய ராணுவம்.. BBC தமிழ் செய்தியாளரும் தாக்கப்பட்டதால் அதிர்ச்சி!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில், விலை வாசிகள் உயர்ந்து வருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் தினமும் 15 மணி நேரத்துக்கும் மேல் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இப்படி இலங்கை மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலைக்குக் காரணமாக உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கோரி அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்கள் போராட்டத்தை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யாததால் மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அந்த போராட்டம் உச்சம் அடைந்த நிலையில், பொதுமக்கள் கும்பலாக வந்து அதிபர் மாளிகையை கைப்பற்றினர்.

அதைத் தொடர்ந்து நாட்டில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பிச்சென்ற நிலையில் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் இடத்தில் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்றதும் போராட்டக்காரர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று இரவு காலி முகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் ராணுவம் மற்றும் போலிஸாரால் தாக்கப்பட்டனர். இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அங்கு செய்திகளை சேகரிக்க சென்ற பிபிசி பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிபிசி பகிர்ந்துள்ள செய்தியில், “பிபிசி செய்தியாளர்கள் மணிகண்டன், அன்பரசன் எத்திராஜன், ஜெரின் சாமுவேல் ஆகியோர் பிபிசி நேரலையில் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தபோது, வீடியோ செய்தியாளர் ஜெரின் ராணுவத்தால் தாக்கப்பட்டார். அதோடு, ராணுவ வீரர் ஒருவர் அவருடைய கைப்பேசியைப் பறித்து, அதிலிருந்து வீடியோக்களை அழித்தார்.” என கூறப்பட்டுள்ளது.

Also Read: கண்டித்த காதலி.. தலையை தனியே எடுத்து கொண்டு போலிஸ் ஸ்டேசன் வந்த காதலன் : கர்நாடகாவில் அதிர்ச்சி !