உலகம்

“இறந்த மனித உடல் பாகங்களை விற்று பணம் சம்பாதித்த பெண்” : அமெரிக்காவை நடுங்கச் செய்த சம்பவம் !

அமெரிக்காவின் கொலோராடோ என்ற பகுதியில் இருப்பவர் மேகன் ஹெஸ். இவர் சடலங்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பகுதி மக்கள், இறந்து போன சடலங்களை இவரிடம் இறுதி சடங்கு செய்வதற்காக கொடுத்து வந்தனர். ஆனால் இவரோ அதனை முறையாக இறுதி சடங்கு செய்யாமல், அவர்களது உடல் உறுப்புகளை எடுத்து விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

மேலும் அவர்களுக்கு இறுதி சடங்கு முடிந்து விட்டதாக கூறி அவரது குடும்பத்தாரிடம் வேறொரு சாம்பலை கொடுத்து வந்துள்ளார். மேலும் ஒரு உடலுக்கு தலா 1000 டாலர் வரை வசூலித்து வந்துள்ளார். இப்படியாக அவர் பல வருடங்களாக செய்து வர, இந்த சம்பவம் ஒரு நாள் வெளியே வந்தது.

இது குறித்து இவர் மீது அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் விசாரித்த காவல் அதிகாரிகள் அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது இவர் வாங்கும் இறந்த உடலை, ஆராய்ச்சிக்கு பெற்றுக்கொள்பவர்களுக்கு போலி ரசீது தயாரித்துக் கொடுத்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவரை கைது செய்தனர்.

இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று இந்த வழக்கு நீதிபதி முன் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட ஹெஸ், ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். பின்னர் தன் மீதான குற்றத்தை முழுமையாக ஒப்புக்கொண்டார். மேலும் தான் இறந்த சடலங்களையும், பாகங்களையும் மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு விற்றதாகவும், சட்டப்படி இது தவறில்லை என்றும் வாதிட்டார்.

இருப்பினும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டப்பட்ட ஹெஸ்ஸுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதம் செய்தார். இதையடுத்து இந்த வழக்கு வரும் ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சட்டப்படி, உயிருடன் இருக்கும் நபரின் உடல் உறுப்புகளை விற்பது சட்டப்படி குற்றம். ஆனால், சடலங்களை விற்கும் குற்றம் சட்டப்படி முறைப்படுத்தப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாலியல் புகாருக்கு ஆளானவருக்கு நாடாளுமன்ற பதவி.. போரிஸ் ஜான்சன் பதவி விலகளுக்கு உண்மையான காரணம் என்ன?