உலகம்

புகுஷிமா அணு உலை கழிவை கடலில் திறந்து விடும் ஜப்பான்.. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க இலங்கை அதிரடி முடிவு!

1) அரசு ஊழியர்களுக்கு சம்பளம் - ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இலங்கை!

இலங்கை அரசிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதனால் கச்சா எண்ணையுடன் இலங்கை துறைமுகத்தில் இருக்கும் 3 கப்பல்களில் இருந்து இறக்குமதி செய்ய முடியவில்லை. இதையடுத்து அமெரிக்க டாலரை வெளிச்சந்தையில் வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடிவு செய்து ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட்டு இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

2) உக்ரைன் கீவ் நகரத்தில் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியபோது, அதன் தலைநகர் கீவ்வில் இருந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. தூதரக அதிகாரிகள் அனைவரும் தாயகம் திரும்பினர். இந்நிலையில் தற்போது 3 மாதங்களுக்கு பிறகு கீவ்வில் மீண்டும் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரம் மீதான தாக்குதலை ரஷ்ய சில வாரங்களாக நிறுத்திய நிலையில், அமெரிக்க தூதரகம் மீண்டும் செயல்படவுள்ளது.

3) சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்

புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணுஉலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட ஆலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை மூலம் கழிவு நீரை வெளியேற்றுவது அரசின் திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4) ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம்

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர தலிபான்கள் தடை விதித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் அனைத்து பெண்களும் ஹிஜாப் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

5) பாகிஸ்தானில் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை

நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதுபற்றி ஷபாஸ் ஷெரீப் கூறுகையில், "தேவையற்ற மற்றும் ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விலைமதிப்பற்ற அன்னிய செலாவணி செலவிடப்படாது" என கூறினார்.

Also Read: 'ஈராக்கா, உக்ரைனா?.. ஜார்ஜ் புஷ்க்கு வந்த கன்பூஷன்.. இப்போதாவது உண்யையை பேசுனிங்களே - நெட்டிசன்கள் கலாய்!