உலகம்

போலி கணக்கில் வெளியான வதந்திக்கு Google Maps விளக்கம்.. நைஜீரியாவில் பஸ் தீப்பிடித்து 20 பேர் பலி!

இலங்கை துப்பாக்கிச்சூடு சம்பவம்: அறிக்கை அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் காயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவான அறிக்கை அளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது . அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இலங்கை அதிபர் பதவி விலகக் கோரி 1 வாரம் வேலை நிறுத்தம் செய்வதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ரஷ்யா 25 சதவீத படைகளை இழந்துவிட்டது: அமெரிக்கா தகவல்

ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த 55 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் படைகள் இன்று சரணடையாவிட்டால் விளைவு வேறு விதமாக இருக்கும் என ரஷியா எச்சரித்துள்ளது. அதே சமயம், உக்ரைன் படைகள் தங்களுக்கு உதவ புதிய படைகளை அனுப்பும்படி அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதேசமயம் இந்த போரில் ரஷியா தனது 25 சதவீத படைகளை இழந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷியாவின் பலம் குறைந்து வருகிறது. இந்த சமயத்தில் உக்ரைனுக்கு நாங்கள் ஆயுத தளவாடங்களை உதவிக்கு அனுப்புவோம் என கூறியுள்ளது.

நைஜீரியாவில் காருடன் மோதி மினி பஸ் தீப்பிடித்தது- 20 பேர் பலி

நைஜீரியாவில் காருடன் மினி பஸ் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு நைஜீரியா நெடுஞ்சாலையில் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது எதிரே வந்த காரும் மினி பஸ்ஸும் எதிர்பாராத விதமாக மோதிய வேகத்தில் பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது.இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் பஸ்சில் இருந்த குழந்தைகள் உள்பட 20 பேர் கருகி இறந்தனர்.

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம், “காசா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி ராக்கெட் வீசப்பட்டது. எனினும் அதனை நாங்கள் இடைமறித்து அழித்தோம்” என்று தெரிவித்தது. ஹமாஸின் தாக்குதலுக்கு எதிர்வினையாக இஸ்ரேல், காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவும் சூழலில் வன்முறைகளைக் கைவிடுமாறு இருநாடுகளுக்கும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

போலி கணக்கில் வெளியான வதந்திக்கு கூகுள் மேப் விளக்கம்

போலி கணக்கில் வெளியான வதந்திக்கு கூகுள் மேப் விளக்கம் அளித்துள்ளது. உலகில் எங்காவது போர் உள்ளிட்ட சர்ச்சைக்குள்ளான விஷயங்கள் நடந்து கொண்டு இருந்தால் அந்த பகுதியை கூகுள் மேப் தலைமை மங்கலாக மாற்றுவது வாடிக்கை. ரஷ்யாவில் கனரக ஆயுதங்கள் நிறைந்து இருப்பதால் ரஷ்யாவின் பகுதிகள் சிலவற்றை கூகுள் மேப் செயலி மங்கலாக மாற்றியுள்ளது என்று போலி கணக்கில் கருத்து பதிவிடப்பட்டிருந்தது. மேலும் சித்தரிக்கப்பட்ட ஒரு புகைப்படமும் இந்த பதிவோடு வைரல் ஆகி வந்தது. இதனையடுத்து கூகுள் நிறுவனம் இந்த போலி பதிவுக்கு பதில் அளித்து: “ரஷ்யாவின் எந்த பகுதியையும் கூகுள் மேப் செயலி மறைக்கவோ அல்லது பிளர் செய்யவோ இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.”

Also Read: அமெரிக்காவில் முக்கிய பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண் நியமனம்.. புதிய சுகாதார அமைச்சரால் சர்ச்சை! #World