உலகம்

அகதிகளான 50 லட்சம் உக்ரைன் மக்கள்.. இம்ரான்கான் மீது ஷபாஸ் ஷெரீப் பரபரப்பு குற்றச்சாட்டு!

1) உக்ரைனில் இருந்து 50 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்!

ஷியாவுடனான போரினால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 50 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறுவோர் போலந்து, ஹங்கேரி, சுலோவேகியா, ருமேனியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக போலந்து நாட்டில் அகதிகளாக சென்றுள்ளனர்.

2) இம்ரான்கான் மீது ஷபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு!

இம்ரான்கான் ஆட்சியில் இருந்தபோது பரிசாக கிடைத்த வைர நகைகள், பிரேஸ்லெட்டுகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை துபாயில் ரூ.14 கோடிக்கு விற்று விட்டதாக ஷபாஸ் ஷெரீப் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசு கஜானாவில் இருந்து இந்த பொருட்களை எடுத்து விற்றுள்ளதாக தெரிவித்த ஷபாஸ் ஷெரீப், அதேநேரம் முன்பு தனக்கு கிடைத்த கைக்கடிகாரம் ஒன்றை கஜானாவில் ஒப்படைத்து விட்டதாக கூறினார்.

3) கொழும்பு பங்குச்சந்தை தற்காலிக மூடல்!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்க பணம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகக் கோரி தலைநகர் கொழும்புவில் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்பட உள்ளது என பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

4) பாகிஸ்தான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் ராஜினாமா!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக செயல்பட்டு வருபவர் குவாசிம் கான் சுரி. இவர் இம்ரான்கானின் ஆதரவாளராக தகவல் வெளியானது. தற்போது புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ள நிலையில் துணை சபாநாயகர் குவாசிம் மீது ஆளும்கட்சி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை நாடாளுமன்ற செயலாளர் ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு புதிய துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் பணி விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

5) பாகிஸ்தான் பாராளுமன்ற புதிய சபாநாயகராக பர்வேஸ் அஷ்ரப் நியமனம்!

பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகராக, பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் பர்வேஸ் அஷ்ரப் (வயது 71) நியமிக்கப்பட்டுள்ளார். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட, அவருக்கு தற்காலிக சபாநாயகர் அயாஸ் சாதிக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அஷ்ரப் கடந்த 20212ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி முதல் 2013 மார்ச் 16ம் தேதி வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இலங்கையில் பெட்ரோல் வாங்க உச்சவரம்பு நிர்ணயம்.. பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 35 பேர் பலி! #5IN1_WORLD