உலகம்

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்க உள்ள ஷபாஸ் ஷெரீப்.. கீவ் நகரில் போரிஸ் ஜான்சன்!

துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு!

துனிசியாவில் அகதிகள் படகு கடலில் மூழ்கிய விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீத்திய மாதங்களில் துனிசியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலியை நோக்கி பயணிக்க முயற்சிக்கும் போது கடலில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு துனிசிய கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாளை தேர்வாகிறார்!

இம்ரான் கான் அரசு கவிழ்ந்ததையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமர் நாளை தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்காக பாராளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது. பாகிஸ்தானின் புதிய பிரதமராக ‌ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ‌ஷபாஸ் ஷெரீப்பை பிரதமராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அவர் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதரர் ‌ஷபாஸ் ஷெரீப் ஆவார். அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்- மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கீவ் நகரில் உக்ரைன் அதிபரை சந்தித்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உதவியாளர் இது தொடர்பான தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததோடு, இருவரும் சந்தித்துப் பேசிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. உக்ரைனின் கிராமடோர்ஸ்கில் உள்ள ரெயில் நிலையம் மீது ரஷியா நடத்திய தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் உறுதியான பதிலடி கொடுக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்!

அணி சேரா நாடுகள் வாயிலாக ரஷ்யா உடன் ஏற்பட்ட வரலாற்றுபூர்வமான உறவிலிருந்து விலகி வர இந்தியாவை வலியுறுத்துவோம்' என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.அமெரிக்க வெளியுறவு துறை இணை அமைச்சர் வென்டி ஷெர்மன் கூறியதாவது:உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியா - அமெரிக்க ராணுவ உறவு வலுவாக உள்ளது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் வளம் மற்றும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட 'குவாட்' அமைப்பில் அமெரிக்கா உடன் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளும் உள்ளன. ராணுவ தளவாடங்கள் விற்பனை, தயாரிப்பு உள்ளிட்டவற்றில் அமெரிக்கா உடனான கூட்டுறவை இந்தியா அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த கூட்டுறவு மேலும் வலுவடையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

சமையல் கேஸ்களுக்கு கடும் தட்டுப்பாடு!

இலங்கையில் சமையல் கேஸ்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், அங்குள்ள மக்கள் சிலிண்டருக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகர் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை 3 மணி முதலே மக்கள் சமையல் கேஸ் வாங்க காத்திருக்கின்றனர். எனினும், ஒரு சிலருக்கு மட்டுமே சமையல் கேஸ் கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும், ஒருசிலர் நீண்ட தூரம் பயணம் செய்து அதிக விலை கொடுத்து சமையல் கேஸ்களை வாங்கி வருகின்றனர். சமையல் கேஸ் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

Also Read: மீண்டும் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்..? - கருத்துக்கணிப்பிலும் முன்னிலை! | #5in1_World