உலகம்

பிரான்சிலும் 'ஹிஜாப்' சர்ச்சை.. ஹிஜாப் அணிந்தால் அபராதம்? - இரண்டாக உடைந்த சரக்கு விமானம்! #5IN1_WORLD

இஸ்ரேல் நாட்டில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாலஸ்தீனியர்களின் அண்மைக்கால தாக்குதல்களின் தொடர்ச்சியாக இது கருதப்படுகிறது. இஸ்ரேலில் நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும், பயங்கரவாதம் மற்றும் வன்முறையை எதிர்கொள்வதில் அமெரிக்கா உறுதியாக நிற்பதாகவும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்!

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐ.நா.பொதுச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. தீர்மானத்திற்கு ஆதரவாக 93 நாடுகள் வாக்களித்தன. 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்தியா உள்பட 58 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதையடுத்து ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடை நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேறியது. இது சட்டவிரோதம் என ரஷியா தெரிவித்துள்ளது.

இலங்கையின் நிலைமையை மீட்டெடுக்க பொருளாதார நிபுணர்கள் கமிட்டி அமைப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அன்னிய செலாவணி தட்டுப்பாட்டை சமாளித்து, நிலைமையை மீட்டெடுக்க, பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை கமிட்டியை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. அதிபர் நியமித்துள்ள ஆலோசனைக் குழு, இலங்கை தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதியத்திடம் கடன் பெறுவது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சில் ஈடுபடும்.

நாட்டில் நிலையான, நீடித்த வளர்ச்சிக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கும். இக்குழுவில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர், இலங்கையின் ஜார்ஜ் டவுன் பல்கலை., பேராசிரியரும், உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர், சர்வதேச நிதியத்தின் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

பிரான்சில் 'ஹிஜாப்' அணியும் பெண்களுக்கு அபராதம்?

''ஹிஜாப்' அணியும் பெண்களுக்கு அபராதம் விதிப்பேன்'' என, பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் மரைன் லீ பென் அறிவித்துள்ளார். பிரான்சில் அதிபர் தேர்தலில் மரைன் லீ பென் போட்டியிடுகின்றார். இந்நிலையில், அவர் “நான் அதிபரானால், பிரான்சில் பொது இடங்களில் பெண்கள் 'ஹிஜாப்' அணிந்து செல்ல தடை விதிப்பேன். சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிச் செல்வோருக்கு அபராதம் விதிப்பதுபோல், பொது இடங்களில் ஹிஜாப் அணிந்து செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும். பொது அமைதி, சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஹிஜாப் அணிய தடை விதிப்பேன். இதில், தனி மனித உரிமைக்கு பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறியுள்ளார்.

இரண்டாக உடைந்த சரக்கு விமானம்!

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கோஸ்டாரிகா. கோஸ்டாரிகாவில் உள்ள விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியபோது விமானத்தில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனைத்தொடர்ந்து சிறிது தூரம் ஓடு பாதையை விட்டு விலகி தரையில் பயணித்த விமானம் இரண்டாக உடைந்து நின்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. விபத்து ஏற்படும் போது, விமானத்தில் 2 பேர் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

Also Read: #5in1_World | பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா... இலங்கை அரசின் முயற்சி வெல்லுமா?