உலகம்
நாட்டை விட்டு தப்பிய இம்ரான் கான் மனைவியின் தோழி.. கைப்பையில் 90,000 டாலரா? - பாகிஸ்தானில் பரபரப்பு!
1) சுய சரிதை எழுதும் ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்!
உலகமெங்கும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் பிரபல ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். 40 வயதான இவர் பாடகி, பாடலாசிரியர், நடன கலைஞர் என பல முகங்களைக் கொண்டவர் ஆவார். பாப் இளவரசி என்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறார். இவர் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதுவதாக உறுதி செய்துள்ளார். தனது வாழ்க்கையில் நடந்த பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத வேதனை நினைவுகளையும் அவர் பகிர்ந்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
2) இம்ரான்கான் மனைவியின் தோழி துபாய்க்கு ஓட்டம்
இம்ரான் கானின் 3-வது மனைவி புஷ்ரா பீபியின் நெருங்கிய தோழி பராக்கான். இவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் உயர் பதவிகளில் பணி நியமனம் தொடர்பாக பலரிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன.
இந்நிலையில் இம்ரான் தற்போது நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் புதிய அரசு அமைந்தால் தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என பராக்கான் 2 நாட்களுக்கு முன்பு துபாய்க்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 90,000 டாலர் மதிப்புடைய கைப்பையுடன் அவர் தனி விமானத்தில் துபாய்க்குப் போனதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
பராக்கானின் கணவர் அஸ்கான் ஜமுல்குசார் ஏற்கனவே அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இம்ரான்கானுக்கு நெருக்கமான பலரும் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3) ஹங்கேரியில் நடந்த பரிதாபம்
ஹங்கேரியில், தண்டவாளத்தின் குறுக்கே வந்த லாரி மீது ரயில் மோதிய விபத்தில், ஐந்து தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். ஹங்கேரியில் உள்ள மைண்ட்ஸ்சென்ட் நகரில், நேற்று காலை பயணியர் ரயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது, 7 தொழிலாளர்களுடன் தண்டவாளத்தின் குறுக்கே வந்த லாரி மீது, ரயில் மோதியது. இதில், லாரி தலைகீழாக கவிழ்ந்ததில், ஐந்து தொழிலாளர்கள் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி மீது வேகமாக மோதியதால், ரயிலும் தடம் புரண்டது. அதிலிருந்த 10 பயணியர், லேசான காயமடைந்தனர்.
4) 9 ஆண்டுகளுக்கு பிறகு எகிப்துக்கான தூதரை நியமிக்க துருக்கி முடிவு
ஏறக்குறைய 9 ஆண்டுகளக காலியாக இருந்த ராஜதந்திர பதவியை நிரப்ப கெய்ரோவுக்கு புதிய தூதரை நியமிக்க துருக்கி முடிவு செய்துள்ளது. 2015 - 2020க்கு இடையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கான துருக்கியின் முன்னாள் பிரதிநிதியான சாலிஹ் முட்லு சென் புதிய தூதராக இருப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கெய்ரோவில் ஒரு தூதரை நியமிப்பதற்கான அங்காராவின் முடிவு முறிந்த உறவை சரிசெய்ய பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சாத்தியமாகியுள்ளது.
5) ராஜபக்சே அரசு பெரும்பான்மை இழந்தது: இலங்கையில் உச்சகட்ட அரசியல் குழப்பம்
ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா தலைமையிலான கூட்டணியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நேற்று விலகினர்.மேலும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலபிடியாவும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இந்த எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தனித்துச் செயல்படுவது என முடிவு செய்துள்ளனர். அதேநேரம் எதிர்க்கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என அறிவித்து உள்ளனர். இதன் மூலம் ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!