உலகம்

“ஆத்தீ.. உங்க சங்காத்தமே வேணாம்” : சீனாவைக் கண்டு அலறும் நேபாளம்! #5in1_World

1) ஹாங்காங் தலைவர் தேர்தலில் போட்டியில்லை; கேரி லாம் அறிவிப்பு

ஹாங்காங் தலைவர் தேர்தலில் 2வது முறையாக போட்டியிடவில்லை என்று கேரி லாம் கூறியுள்ளார். சீனா ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சி பிரதேசம் ஆக ஹாங்காங் உள்ளது. இதன் தலைவராக கேரி லாம் உள்ளார். ஹாங்காங் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருந்த நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வருகிற மே 8ந் தேதி தேர்தல் நடத்த முடிவானது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. எனினும், 2வது முறையாக பதவியில் தொடர போவதில்லை என கேரி லாம் இன்று கூறியுள்ளார். எனது இந்த முடிவு முழுவதும் குடும்ப சூழலை கவனத்தில் கொண்டது என்று அவர் கூறியுள்ளார். இதனை மக்களின் அரசிடம் கூறியுள்ளேன். அவர்கள் புரிந்துணர்வை வெளிப்படுத்தியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

2) ஆப்கானிஸ்தானில் பண பரிமாற்ற சந்தையில் குண்டுவீச்சு - 15 பேர் படுகாயம்!

ஆப்கானிஸ்தானில் பண பரிமாற்ற சந்தையில் குண்டுவீச்சு சம்பவத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கிற ஆப்கானிஸ்தானில், தலைநகர் காபூலில் ஒரு பண பரிமாற்ற சந்தை இயங்கி வருகிறது. அங்கு கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்த ஒரு கொள்ளையன், கையெறி குண்டை வீசினான். இந்த குண்டுவீச்சு சம்பவத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல மாதங்களுக்கு பிறகு காபூலில் இப்போது குண்டுவெடித்து இருப்பது அங்கு வாழும் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

3) ‘‘உங்கள் கடன் வேண்டாம்’’- சீனாவை கண்டு அலறும் நேபாளம்

சீனாவிடம் அதிக வட்டிக்கு வாங்கிய கடன்களால் சிக்கிக் கொண்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் தற்போது அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெருந்தொகையை கடனாக தர சீனா முன்வந்த நிலையில் அதனை ஏற்க நேபாளம் மறுத்துள்ளது. மாலத்தீவு, வங்கதேசமும் சீன கடன்களை பெற அச்சம் தெரிவித்துள்ளன. சீனாவிடம் இருந்து மானியங்களை மட்டுமே தங்கள் நாடு ஏற்க முடியும் என்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான கடன்களை ஏற்க வாய்ப்பில்லை என்றும் சீன அமைச்சர் வாங்கிடம் நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா கூறினார்.

4) ஊரடங்குக்கு மத்தியிலும் சீன நகரத்தில் கொரோனா அதிகரிப்பு

சீனாவின் பொருளாதார தலைநகரம் என்ற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரம், கொரோனா தொற்றால் தத்தளிக்கிறது. 2 கோடியே 60 லட்சம் பேர் வாழும் இந்த நகரில், தொற்று பரவல் தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. நேற்று ஒரே நாளில் 438 பேருக்கு கொரோனா உறுதியானது. 7,788 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் வைரஸ் தாக்குதல் உள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகம் ஆகும். இங்கு கொரோனா பாதித்த குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் தனித்தனி தனிமை மையங்களில் வைப்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.

5) மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவில் 6 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாக்ரமென்டோ நகரில் உள்ள ஒரு தெருவில் நேற்று காலையில் துப்பாக்கிச் சூடு நடந்த 'வீடியோ' சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மக்கள் பதறியடித்து ஓடுவதும், துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சாக்ரமென்டோ நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஒன்பது பேரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். விசாரணை நடத்தி வருகிறோம்' என கூறப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியது யார், இறந்தது யார் என்ற விபரங்களை போலிஸார் வெளியிடவில்லை.