உலகம்

குப்பைத்தொட்டியால் லட்சாதிபதியான பெண்... பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கானின் அரசு..! #5in1_World

1) ரஷ்ய உளவு அதிகாரிகளை வெளியேற்றும் நெதர்லாந்து

நெதர்லாந்து அரசு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ரஷ்ய உளவு அதிகாரிகளை வெளியேற்ற உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதுதவிர ரஷ்யாவுக்கு தூதரக ரீதியில் அழுத்தம் கொடுக்கும் விதமாக தங்கள் நாடுகளில் இருந்த ரஷிய அதிகாரிகளை மேற்கூறிய நாடுகள் வெளியேற்றின. இந்த நிலையில் தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ரஷ்ய உளவு அதிகாரிகள் 17 பேரை வெளியேற்றுவதாக நெதர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

2) குப்பைத்தொட்டியால் இன்று லட்சாதிபதி!

குப்பைத்தொட்டியால் லட்சாதிபதி ஆகியுள்ளார் வர்ஜினியா நாட்டைச் சேர்ந்த பெண். வர்ஜினியாவைச் சேர்ந்த மேரி எலியாட் என்பவர் சில நாட்களுக்கு முன்பு லாட்டரி வாங்கியுள்ளார். பரிசு அறிவிக்கப்பட்ட அன்று 6-13-18-21-25 என்ற நம்பருக்கு $110,000 பரிசு விழுந்துள்ளது அந்த எண்கள் தன் குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாள் என்பதால் நினவில் வைத்துள்ளதால் அவர் சந்தோஷத்தில் விண்ணில் பறந்துள்ளார். பின்புதான் அதை தவறுதலாக குப்பைத்தொட்டியில் தூக்கிப் போட்டதை அறிந்து அதிர்ச்சி ஆகியுள்ளார். பின்பு அதை தேடி எடுத்து பரிசை வாங்கி வந்துள்ளார். இந்திய மதிப்பில் அந்த பரிசின் விலை 83 லட்சத்து 35 ஆயிரத்து 151 ரூபாய் ஆகும்.

3) செக் குடியரசின் பிரதமருக்கு கொரோனா

செக் குடியரசு நாட்டின் பிரதமராக இருப்பவர் பீட்டர் பியலா. இவருக்கு வயது 57. இவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து அவர் வீட்டில் 7 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்த நாட்டில் நேற்று ஒரே நாளில் 8,812 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை இங்கு 37 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 39 ஆயிரத்து 610 பேர் தொற்றால் இறந்துள்ளனர்.

4) பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கானின் அரசு

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை எம்.க்யூ.எம் கட்சி விலக்கிக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது வியாழக்கிழமை விவாதம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 3-ஆம் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் எம்.க்யூ.எம் கட்சி அறிவித்துள்ளது. இதனால் இம்ரான்கானின் அரசு நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே பெரும்பான்மையை இழந்தது.

5) பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ மருத்துவமனையில் அனுமதி!

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, இவரது வயிற்றில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் நடந்ததிலிருந்து அவரது உடல்நிலை குறித்து கவலைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த ஜனவரியில் குடல் அடைப்பு பிரச்சினைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Also Read: #5in1_World : “Facebook, Twitter-க்கு போட்டியாக சமூக வலைதளமா?” - எலான் மஸ்க்கின் திட்டம் என்ன?