உலகம்

அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனையை கைது செய்த ரஷ்யா - பின்னணி என்ன?

உக்ரை - ரஷ்யாவுக்கு இடையே 11 நாட்களுக்கு மேலாகத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய தலைநகரங்களை ரஷ்ய ராணுவம் தங்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர்.

மேலும், இரண்டு நகரங்களில் தற்காலிமாக தாக்குதலை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இருப்பினும் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்தை அடுத்து உலக நாடுகள் பலவும் ரஷ்யாவிற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது. மேலும் பொருளாதாரத் தடையும் ரஷ்யாவிற்கு விதிக்கப்பட்டது.

இந்த போர் காரணமாக மறைமுகமாக ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இரண்டு நாட்டு அதிபர்களும் ஒருவரை மாறி ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். இதனால் மூன்றாவது உலகப்போருக்கு இந்த தாக்குதல் வித்திடுமோ என்றும் அச்சப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரினர் போதை பொருளை வைத்திருந்ததாகக் கூறி, ரஷ்ய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம் கடந்த மாதம் மாஸ்கோ சென்றுள்ளார். அப்போது அவரை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தபோது போதைப் பொருட்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை சுங்க அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒருமாதம் கடந்த பிறகு தற்போதுதான் ரஷ்யா இது குறித்து தகவலை வெளியே தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் பிரிட்னி கிரினரை மீட்பதற்காக நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். பிரிட்னி கிரினர் இரு முறை தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்கக் கூடைப்பந்து அணிகளில் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.

Also Read: நீலகிரி தேயிலையை விரும்பும் ரஷ்ய - உக்ரைன் மக்கள்.. ‘4 கோடி கிலோ’ தேயிலை ஏற்றுமதி தேக்கம் : பகீர் தகவல் !