உலகம்

“இந்தாண்டை விட 2021 மிகமோசமாக இருக்கும்” - உணவுப் பஞ்சம் குறித்து எச்சரிக்கும் நோபல் பரிசு பெற்ற அமைப்பு!

2020ம் ஆண்டைவிட அடுத்த ஆண்டு உணவுப் பஞ்சம் அதிகரிக்கும் என்று ஐ.நா-வின் உலக உணவு கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு கடந்த மாதம் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அமைப்பு, உலகம் முழுவதும் வறுமையில் வாடும் நபர்களுக்கு 52 ஆண்டுகளாக உணவு வழங்கி வந்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2020-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டு உணவுப் பஞ்சம் மோசமானதாக இருக்கும் என உலக உணவு அமைப்பின் தலைவர் டேவிட் பேஸ்லி கூறியுள்ளார்.

இதுகுறித்து டேவிட் பேஸ்லி ஒரு பேட்டியில் கூறுகையில், “கொரோனா தொற்று பரவலால் உலகில் பல பகுதிகளில், உணவுப் பஞ்சம் அதிகரிக்கும் என்று நான் எச்சரித்திருந்தேன். அந்த எச்சரிக்கையை ஏற்று உலக தலைவர்கள் பல்வேறு உதவிகளை அளித்தனர்.

எனவே இந்த ஆண்டு உணவுப் பஞ்சத்தால், மக்கள் பாதிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. பல நாடுகளின் பொருளாதாரத்தை கொரோனா தொடர்ந்து சிதைத்து வருகிறது.

இதனால் இந்தாண்டு கிடைத்த நிதியுதவி அடுத்த ஆண்டு கிடைக்காமல் போகும். இதன் காரணமாக 2020-ஐ விட 2021ல் உணவுப் பஞ்சம் மிகவும் மோசமான வகையில் இருக்கும். உலக நாடுகள் உரிய நிதியுதவி வழங்காவிட்டால், இந்தச் சூழலைத் தவிர்க்க முடியாது.

பல நாட்டின் உலக தலைவர்களை நேரில் சந்தித்து நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம். உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆய்வின்படி, அடுத்த சில மாதங்களில் ஏமன், தெற்கு சூடான், வடகிழக்கு நைஜீரியா மற்றும் புர்கினா பாசோ உள்ளிட்ட 20 நாடுகள் மிகக் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை சாத்தியங்களை எதிர்கொள்ளக்கூடும்” என எச்சரித்துள்ளார்.

Also Read: கொரோனா ஊரடங்கால் தலைவிரித்தாடும் வறுமை - 62% குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திய அவலம்!