உலகம்

"ஊரடங்கில் புலிட்சர் விருதுபெற்ற ரகசிய புகைப்படங்கள்"- காஷ்மீர் பத்திரிகையாளர்களின் சாகசத்திற்கு பரிசு!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அப்பகுதி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட மேலும் சில அரசியல் தலைவர்கள் ஏற்கனவே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். 2010-ம் ஆண்டு குடிமையியல் தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷா பைசலும் இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருந்தார். அரசியல் தலைவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?ஆனால், காஷ்மீர் குடிமக்களை பற்றி அறிய எந்தவிதமான தகவலும் உலகிற்கு கிடைக்கவில்லை.

காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு, ஒடுக்குமுறை துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணையம், தடை செய்யப்பட்ட பத்திரிகைகள் என முழுமையான காஷ்மீரின் தோற்றம் வெளிவரவில்லை.

இந்தச் சூழலில்,அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர்களான தார் யாசின், முக்தார்கான் மற்றும் சன்னி ஆனந்த் ஆகியோர் ஊரடங்கில் காஷ்மீரின் உண்மையான தோற்றத்தை வெளிக்கொணர முயற்சித்தார்கள். அதற்கு அவர்கள் மூவரும் தங்களது புகைப்படக்கருவியை பயன்படுத்திக் கொண்டனர். அப்போது அவர்கள் எடுத்த புகைப்படங்கள் இப்போது 2020 க்கான புலிட்சர் விருதுக்கு முழு அம்ச புகைப்படங்களாக தேர்த்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கின்றன.

நியூயார்க்கின் கொலம்பிய பல்கலையில் நடக்கும் விழாவில்தான் இதுபோன்ற விருது பெற்றவர்களை அறிவிப்பார்கள். நியூயார்க் அதிதீவீர கொரோனா பாதிப்புக்கு உட்பட்டிருப்பதால் புலிட்சர் விருதின் நிர்வாகி ‘டானா கேனெடி’ தன்னுடைய அறையிலிருந்து YouTube ல் விருது பெற்றவர்களைப் பற்றி அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தங்கள் இணையதளத்தில் ஒரு அறிக்கையில், இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருது சர்ச்சைக்குரிய இமயமலைப் பிரதேசத்தில் வாழும் காஷ்மீர் புகைப்படக் கலைஞர்கள் ‘உறைந்து போன வாழ்க்கையை’ பிரதிபலிக்கும் தங்களது படங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து புகைப்பட கலைஞர்கள் கூறும்போது, ''நாங்கள் மிகச் சிரமப்பட்டு பல தடைகளைத் தாண்டித்தான் இந்த மாதிரி புகைப்படங்களை எடுக்க முடிந்தது. சாலைகள் தடை செய்யப்பட்டு இருக்கும், வழிகள் இருக்காது, பல நேரங்களில் வீடுகளில் பதுங்கி எடுக்கவேண்டியதிருக்கும், காய்கறிக் கூடையில் கேமராவை மறைத்து வைத்து போட்டோ எடுத்திருக்கிறோம்.

மக்கள் ஆர்ப்பாட்டங்கள், இந்திய இராணுவ நடவடிக்கைகள், காஷ்மீர் போலீஸ், என பலதரப்பட்ட புகைப்படங்களை எடுத்திருக்கிறோம்.

இதற்காக விமான நிலையத்தில் விசாரிக்கப்பட்டு டெல்லியில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறோம்'' என்று கூறினர்.

பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் யாசினும், கானும் காஷ்மீரின் முக்கிய நகரமான ஸ்ரீநகரில் வசிக்கிறார்கள், ஆனந்த் ஜம்மு மாவட்டத்தில் வசிக்கிறார்.

இந்த விருது என்னை சந்தோசத்தில் ஆழ்த்தியது என்று ஆனந்த் கூறினார். “நான் அதிர்ச்சியடைந்தேன், முதலில் அதை நம்ப முடியவில்லை,” என்றும் அவர் கூறியுள்ளார்.

அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கேரி ப்ரூட் கூறுகையில் இந்த பத்திரிகை புகைப்படக் கலைஞர்களின் பணி “முக்கியமானது மற்றும் அற்புதமானது” என்றார்.

Also Read: கொரோனா விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், அசாமை அச்சுறுத்தும் ‘வைரஸ் காய்ச்சல்’ - 100% இறப்பால் அதிர்ச்சி!