உலகம்
கொரோனாவை தடுக்க கைகோர்த்த பெரும் போட்டியாளர்கள்... ஒன்றிணைந்த ஆப்பிள் கூகுள் ! #Covid19
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 17 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது அரசுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டாலும், அவர்கள் மூலமாக ஏற்கனவே பிறருக்கு தொற்று ஏற்பட்டிருக்கவும் கூடும். இந்த தொடர்பைக் கண்டறியும் ‘Contact Tracing' முறையை செயல்படுத்துவதில் அரசுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், உலகின் பெரும் தொழில்நுட்பப் போட்டி நிறுவனங்களான கூகுளும் ஆப்பிளும் இணைந்து ‘Contact Tracing' தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளன.
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கிலும், அரசுகளும், சுகாதார அதிகாரிகளும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கப் போராடி வருகிறார்கள். இந்நிலையில், கூகுள் மற்றும் ஆப்பிளின் கூட்டு முயற்சியில், புளூடூத் தொழில்நுட்பம் மூலம், வைரஸ் பரவலைத் தடுக்க உதவுகிறோம்.
கொரோனா வைரஸ், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் பரவும் என்பதால், அதன் தடத்தை கண்டறிந்தால் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். இதற்காக ஆப்பிளும் கூகுளும் இணைந்து ஸ்மார்ட்போன் இயங்குதளத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மே மாதத்தில் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பின்னர் அது இயங்குதளத்திலேயே செயல்படும் வகையில் அப்டேட் செய்யப்படும். இரு நபர்கள் ஒரு இடத்தில் சந்தித்தால் அவர்களின் மொபைலில் இயங்கும் ப்ளூடூத், அவர்கள் இருவரும் தொடர்பில் இருந்ததாக ஸ்மார்ட்போனுக்கு தகவல் அனுப்பிவிடும்.
அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அரசுகள் அறிமுகப்படுத்தியுள்ள செயலியில் குறிப்பிட்டால், அவருடன் தொடர்பில் இருந்த அத்தனை நபர்களின் மொபைல் போன் விவரங்களையும் அனுப்பி வைக்கும். இதன் மூலம் எளிதாக பரவலின் தடத்தைக் கண்டறியலாம். தனிமைப்படுத்துவதில் எளிதாக இருக்கும்.
ஆப்பிள் மற்றும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை உலகெங்கிலும் கிட்டத்தட்ட 300 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதால், இந்தத் தொழில்நுட்பம் மிகுந்த பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப உலகில் கடும் போட்டி நிறுவனங்களாகக் செயல்படும் ஆப்பிள் - கூகுள் நிறுவனங்கள் கொரோனாவை தடுக்க ஒன்றிணைந்திருப்பது ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!