உலகம்

“ஊரடங்கு தீர்வாகாது; கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலையெடுக்கக்கூடும்” : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த மருத்துவ சோதனைகளையும் உலக நாடுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் ஐ.நாவின் உலக சுகாதார மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தகவலை உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடுகள் தங்கள் மக்களை, மாநிலங்களை, நகரங்களை முடக்குவது போதாது என உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட நிர்வாகி மைக் ரியான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மைக் ரியான், நாடுகள் தடை உத்தரவுகளை விதித்தால் மட்டும் போதாது; கொரோனா நோய்வாய்ப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது, அவர்களுடன் இருந்த தொடர்புகளைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல் போன்றவற்றில்தான் நாம் உண்மையாக கவனம் செலுத்தவேண்டும்.

பாதிக்கப்பாட்ட பகுதிகள், நகரங்களை முடக்குவது ஆபத்தானது; அதற்கு பதில் வலுவான பொது சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அப்படி முன்னெடுக்கவில்லை என்றால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது நோய் மீண்டும் தீவிரமாகப் பரவும்.

நாம் வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வந்தவுடன் வைரஸ் குறித்த ஆய்வை தொடர வேண்டும், வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தொடர்பு இல்லாத நாடுகளுக்கும் பரவும் கொரோனா” வெகுவாக தீவிரமடைவதற்குள் தடுக்கவேண்டும்- எச்சரிக்கும் ஐ.நா!