உலகம்

தீவிரமடையும் அமெரிக்கா-ஈரான் மோதல்: ஈராக் மீது 2-வது தாக்குதல் - அதிகரிக்கும் போர் பதற்றம்!

அமெரிக்கா மற்றும் ஈரான், ஈராக் நாடுகளின் மோதல் போக்கு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்தது. இந்த மோதல் போக்கு தற்போது மூன்றாம் உலக போருக்கு வழிவகை செய்யும் வகையில் தற்போது உருவெடுத்துள்ளது.

கடந்த வாரம் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த தாக்குதலைத் தொடங்கி வைத்ததே அமெரிக்கா தான் என கடாயெப் ஹிஸ்புல்லா படை தெரிவித்து வந்தனர். இந்த தாக்குதலால் கொதித்துத் போன அமெரிக்கா, ஈராக்கில் இருந்த ஹிஸ்புல் அமைப்பின் தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல் அமைப்பைச் சேர்ந்த 25 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து ஹிஸ்புல் படை ஆதரவாளர்கள் ஆஃப்கான் தலைநகர் காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஒருகட்டத்தில் வன்முறையாக மாற, போராடிய அவர்கள் அமெரிக்கத் தூரகத்தை சூறையாடினர்.

தூதரகத்தை சூறையாடியற்கு பழிவாங்க காத்திருந்தது அமெரிக்கா. அதிபர் டிரம்பின் பேச்சிலும் அது தெரிந்தது. அமெரிக்கர்கள் மீதான தாக்குதல் குறித்த சம்பவத்துக்கு ஈரானே பொறுப்பும் என்றும், ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜானதிபதி டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

இந்த நிலையில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். சிரியாவில் இருந்து விமானம் மூலம் ஈராக் தலைநகர் பாக்தாத் விமானநிலையம் சென்ற அவரை, ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சி படையின் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸ் வரவேற்று காரில் அழைத்து சென்றார்.

இந்த சமயத்தை சாதகமாக்கிக் கொண்ட அமெரிக்க ராணுவம், அவர்கள் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்தது. ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசிம் சுலைமானி உள்ளிட்டோர் சென்ற 2 கார்களின் மீது குண்டுகளை வீசின. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் அபு மஹதியின் ஆதரவாளர்கள் 8 பேரும் உயிரிழந்தனர்.

அபு மஹதி மற்றும் காசிம் சுலைமானி

இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் உறுதிபடுத்துள்ளது. மேலும் அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையினால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த சூழல் தனிவதற்குள் அமெரிக்கா மீண்டும் தனது தாக்குதலை ஈராக்கில் தொடங்கியுள்ளது.

நேற்றைய தினம் ஈரானில் நடத்திய தாக்குதலோடு தொடர்ச்சியாக, இன்று காலை மீண்டும் வடக்கு பாக்தாத் பகுதியில் அமெரிக்க படைகள் வான் வழித் தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை.

மேலும், ஈரான் ஆதரவாளர்கள் சென்ற அணிவகுப்பை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், ராணுவத் தளபதி சுலைமானிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பேரணியாக செல்ல திட்டமிட்டு இருந்ததால், அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Also Read: பாக்தாத் விமான நிலையம் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் : ஈரான் ராணுவத் தளபதி படுகொலை - பதட்டம்!

வான்வழி தாக்குதலை நடத்தியதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும், அமெரிக்காவே நடத்தியதாக ஈராக் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து, இந்திய, சீன, ரஷ்ய வெளியுறவுத்துறை கவலை தெரிவித்துள்ளது.