உலகம்

வெடித்துச் சிதறிய எரிமலை : மனிதத் தோல் சேகரிக்கும் நியூசிலாந்து அரசு - காரணம் என்ன?

நியூசிலாந்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளமான வெள்ளைத்தீவில் எரிமலை ஒன்று உள்ளது. வெள்ளைத் தீவில் உள்ள இயற்கை வளங்களை கண்டு ரசிப்பதற்கு கடந்த டிசம்பர் 10ம் தேதி 47 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த எரிமலை பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்தச் சம்பவத்தின் போது அங்கு சுற்றுலா சென்றிருந்த பயணிகள் ஆபத்தில் மாட்டிக்கொண்டனர். இந்த எரிமலை விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அங்கிருந்து தப்பித்த சிலர் கூறியுள்ளனர்.

மேலும், அங்கிருந்து 27 பேர் கடுமையான தீக்காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவில் மாட்டிக்கொண்ட சுற்றுலா பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் எரிமலை வெடிப்பினால் எழுந்த புகையினால் பலர் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், எரிமலை வெடிப்பினால் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் பலருக்கு தோல்ப் பகுதிகள் முற்றிலும் சேதமடைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் மாற்றுத்தோல் பொருத்தும் சிகிச்சை நடைபெற்றது.

ஆனால், தற்போது அந்த சிகிச்சையைத் தொடரமுடியாமல் இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரி வாட்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வாட்சன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “எரிமலை வெடிப்பினால் சிலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு சிகிச்சைக்கு மனிதத் தோல் தேவைப்படுகிறது. குறிப்பாக 1,292 சதுர அடி தோல் தேவைப்படுகிறது. அதனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உதவி கேட்டுள்ளோம்” என்றார்.

பொதுவாக பலத்த தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு மூளைச் சாவு அடைந்தவர்களின் கனமான தோல் பகுதியை வெட்டி இதுபோல சிகிச்சைக்கு பயன்படுத்துவது வழக்கம். அதனடிப்படையில் தற்போது நியூசிலாந்து அரசு திசு வங்கி, உடல் தானம் செய்பவர்களிடமிருந்தும் பல்வேறு தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் மனித தோல் சேகரித்து வருகின்றனர்.

Also Read: பெண்கள் பாதுகாப்புக்காக புல்லட்டில் பேரணி சென்ற கேரளத்து சிங்கப்பெண்கள் - வைரல் வீடியோ!