உலகம்

நீரவ் மோடியை ஜாமினில் விடுவிக்க வலிமையான ஆதாரம் இல்லை : லண்டன் நீதிமன்றம் கறார்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரக்கணக்கான கோடி மோசடி செய்துவிட்டு இங்கிலாந்து நாட்டுக்குர்க் தப்பியோடியவர் வைர வியாபாரி நீரவ் மோடி.

அந்நாட்டில் சுதந்திரமாக திரிந்து வந்த நீரவ் மோடி கடந்த மார்ச் மாதம் அன்று கைது செய்யப்பட்டார். அப்போது அவரை ஜாமினில் விடுவிக்கும்படி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற ஆணைப்படி நீரவ் மோடி நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

அதன் பிறகு மார்ச் 29-ல் நீதிமன்றக்காவல் முடிந்ததை அடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீரவ் மோடிக்கு ஜாமின் கோரப்பட்டது. ஜாமினில் வெளிவந்தால் ஆதாரங்களை அழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது எனும் இந்திய அரசு தரப்பின் வாதத்தை ஏற்று மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்வாறாக 3 முறை நீரவ் மோடியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நீரவ் மோடி சார்பில் 4வது முறையாக ஜாமின் கேட்டு இங்கிலாந்தில் உள்ள ராயல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து விசாரித்தபோது, நீரவ் மோடி எந்த நாட்டுக்கும் தப்பிவிடமாட்டார் என அவரது வழக்கறிஞரும், இந்தியா ஒப்பந்தம் செய்யாத நாட்டுக்கு நீரவ் மோடி தப்பிக்க வாய்ப்புள்ளது என இந்திய அரசு சார்பிலும் வாதிடப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், நீரவ் மோடியின் ஜாமின் மனுவை 4வது முறையாக தள்ளுபடி செய்துள்ளது. மேலும், நீரவ் மோடியின் நீதிமன்றக் காவலை ஜூன் 27 வரை நீட்டித்த இங்கிலாந்து நீதிமன்றம் அவரை நாடு கடத்துவது தொடர்பான விசாரணையை ஜூன் 29க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இதற்கிடையில், அயல்நாடுகளில் குற்றம் செய்தவர்கள் புகலிடமாக இங்கிலாந்து நாட்டை கருதுவது ஏன் எனக் கேள்வி எழுப்பி, நீரவ் மோடியை ஜாமினில் விடுவிக்க வலிமையான ஆதாரமும் முகாந்திரமும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.