Viral

”மோடியின் ஆட்சியில் பத்திரிகையாளராக செயல்படுவது கடினம்” : பத்திரிகையாளர் அவனி டயஸ்

மோடி அரசின் அழுத்தத்தி னால் தான் நாட்டை விட்டு வெளியேறியதாக ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனத்தின் தெற்காசியப் பணியகத் தலைவர் அவனி டயஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் பத்திரிகையாளராக செயல்படுவது கடினம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சீக்கிய பிரிவினைவாதி கொல்லப்பட்டது தொடர்பான ஆவணப்படம் (செய்திகளை) வெளியிட்டதன் காரணமாக அவருக்கான விசா நீட்டிக்கப்படாது என கூறப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்தியாவை விட்டு அவர் வெளியேறியுள்ளார்.

அவரது முந்தைய விசா காலம் முடியும் ஒரு நாளுக்கு முன்பாக இரண்டு மாதங்களுக்கு மட்டும் நீட்டிக்கப்பட்டது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மோடி அரசாங்கம் எனது விசா நீட்டிப்பு மறுக்கப்படும் என்று என்னிடம் கூறியது. எனவே கடந்த வாரம் நான் திடீரென இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மார்ச் மாதம் அவரது விசாவை புதுப்பிக்க காத்திருந்தபோது இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரியிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது; அதில் எனது வழக்கமான விசா நீட்டிப்பிற்கான விண்ணப்பம் வரப்போவதில்லை என்றும் விசா காலாவதியாகும் முன்பு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி அரசாங்கம் என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது.

எனவே நாங்கள் வெளியேற முடிவு செய்தோம் என அவர் குறிப்பிட்டதை ஸ்க்ரோல் இணையதளமும் சுட்டிக்காட்டி யுள்ளது. இதே போல் சில மாதங்களுக்கு முன் வனேசா டக்னாக் என்ற தெற்காசிய பத்திரிகையாளரும் மோடி அரசாங்கத்தால் நாட்டை விட்டு வெளியேறும் நெருக்கடிக்கு உள்ளானதாக தெரிவித்திருந்தார். உலகளவில் பத்திரிகையாளர் சுதந்திரத்தில் 180 நாடுகளில் இந்தியா 161 என மோசமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நாளை 2 ஆம் கட்ட தேர்தல் : எந்தெந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு? - முழு விவரம்!