Viral

“அதிகமாக வாசித்தும் முட்டாள்களாக இருக்கும் தலைமுறை நாம்தான்” : unregulated thinkers பற்றி தெரியுமா?

சிந்தனைகளில் பல வகை இருக்கின்றன. அதில் ஒன்றுதான், regulated thinking!

எந்த வகை இடையூறுக்கும் உட்படாமல் குறிப்பிட்ட ஓர் இலக்கை நோக்கிச் செல்லும் ஒழுங்குமுறையுடன் செலுத்தப்படும் சிந்தனைமுறை' என regulated thinking-ஐச் சொல்லலாம். ஒழுங்கமைக்கப்பட்டச் சிந்தனை என மொழிபெயர்க்கலாம்.

பொதுவாக அந்தக் காலத்தைய இடதுசாரிகளிடம் இத்தகைய regulated thinking உண்டு. குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி எட்டுக் கோணங்களிலும் சிந்திக்கக் கூடிய ஆழமான பார்வை மிகச் சீராக அவர்களிடம் வெளிப்படும்.

ஒழுங்கமைக்கப்பட்டச் சிந்தனை எப்படி உருவாகிறது?

நிறைய புத்தகங்கள் படிக்கிறோம். சொல்லப்போனால் வேறு எந்தக் காலத்திலும் மனிதன் படிக்காத அளவுக்கு இந்தக் காலத்தில் நாம் வாசிக்கிறோம். சமூகதளங்களுக்கு நன்றி! ஆனால் படிப்பவற்றை எல்லாம் ஏன் படிக்கிறோம்? என்னக் காரணத்துக்காகப் படிக்கிறோம்?

அதிகபட்சமாக நமக்கு ஒரு சமூகதளக் கணக்கு இருக்கிறது. அதில் 'login' செய்கிறோம். அவ்வளவுதான். கண்ணில் படுபவை எல்லாம் தலைக்கு ஏறுகிறது. எந்த இலக்கும் நோக்கமுமற்ற வாசிப்பு. இன்று நாம் அதிகமாக வாசித்தாலும் (சமூகதள வாசிப்பு) அதற்கென நாம் எந்தக் காரணமும் கொண்டிருக்கவில்லை.

வேண்டுமானால் ஒன்றைச் சொல்லலாம். இங்கிருக்கும் சில influencer-களைப் பார்த்து அவர்களுக்குக் கிடைக்கும் 'வரவேற்பை'ப் பார்த்து, நாமும் அவர் போல ஆக வேண்டுமன உள்ளூர ஆசைப்பட்டு வித விதமான பாணிகளில் பதிவிட, தன்னை அறிவாளி எனக் காண்பித்துக் கொள்ள, முற்போக்காக அடையாளப்படுத்தப் பல விஷயங்களைத் தேடி, வாசித்துக் கொண்டிருக்கலாம். அல்லது பணிபுரியும் இடங்களில் நம்மை முன்னிறுத்திக் கொள்ள வாசிக்கலாம்.

ஏதோ ஒன்று சுவாரஸ்யமாக எழுத வேண்டும், அது இருக்கும் 'ட்ரெண்டு'க்கு புதிதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நிறைய லைக்ஸ், 'வித்தியாசமான புரட்சிகர பதிவர்' பட்டம் எல்லாம்.

இதில் எங்குமே நீண்டகால இலக்கு எதுவும் இல்லை. அதிகபட்சமாக ஒரு நாள் கனவு மட்டும்தான். அதுவும் லைக்ஸ் எண்ணிக்கை மற்றும் 'என் கருத்தே சிறந்தது' மனோபாவம். ஒவ்வொரு நாளும் புதுப்புது நாள்.

கடந்த காலத்தில் மார்க்சிய சிந்தனாமுறை பெருமளவுக்கு இருந்தது. அது ஒழுங்கமைக்கப்பட்ட சிந்தனையை உருவாக்கும் தளமாக இருந்தது.

மார்க்சியமும் சித்தாந்தம்தானே என்று கேட்கலாம். இல்லை. பொதுவுடமை அல்லது கம்யூனிசம்தான் சித்தாந்தம். மார்க்சியம் என்பது ஒரு சிந்தனைமுறை. 1+1=2 என்பது போல!

சுலபமாக சொல்வதெனில் 'கருதுகோள்', 'எதிர்கருதுகோள்' மற்றும் 'இரண்டையும் பகுத்துப் பார்த்து உருவாக்கப்படும் கருதுகோள்'. மார்க்ஸ் இதை Thesis, Anti Thesis மற்றும் Synthesis என்பார்.

ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து இருக்கும் என்பதை ஏற்று அதை ஆராய வைத்து பின் இரண்டின் அடிப்படையான உண்மையை உலகுக்கு எடுத்துரைப்பதே மார்க்சிய முறை.

இங்கு இலக்கு என்பது உண்மையைச் சொல்வது. அந்த உண்மையை அறிந்து கொள்ளவென மேற்குறிப்பிட்ட சூத்திரமும் அதைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட மார்க்சிய எழுத்துகளும் பொருள்முதல்வாதமும் இயங்கியலும் இருக்கின்றன.

இத்தனை ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு நேரும் சிந்தனையைத்தான் 'ஒழுங்குமுறைச் சிந்தனை' அல்லது 'regulated thinking' என்கிறோம். அது பைனரியாக எப்போதும் நேர்வதில்லை.

ஆனால் இன்று நாம் வாசிக்கும் எல்லாமும் பைனரி வாசிப்புதான். உண்மைக்கான வாசிப்பு அல்ல. பிழைப்புவாதம் மற்றும் தன்முனைப்பு ஆகியவற்றுக்கான வாசிப்பு. எதிரே இருப்பவனின் கருத்தை உள்வாங்கக் கூட நாம் நேரம் எடுத்துக் கொள்வதில்லை. பிறகு எங்கிருந்து அதை ஆராய்வது?

என்னுடைய வாசிப்பு எல்லாம் என் எதிரியை அல்லது எதிர் பதிவரை cancel செய்ய மட்டும்தான். ஒரு விவாதத்தில் எதிரியை முடக்கிப் போட மட்டும்தான். அதற்கு என ஓர் ஒழுங்குமுறை நமக்கு தேவைப்பட்டதில்லை.

ஒழுங்குமுறையின்மையே பெரும் புரட்சிகர சிந்தனைமுறையாகப் பார்க்கப்படும் சூழலாகவும் சமூகதளங்கள் இருக்கின்றன. எனவே இலக்கின்றி, ஒழுங்கின்றி மட்டுமே நாம் சிந்திக்கிறோம். பேசுகிறோம்.

எதையும் சுலபமாக உடைத்துப் போடும் ஒரு எள்ளல் போதும் நம் அறிவை முன்னிறுத்த. அந்த எள்ளலின் விளைவில் 'கொல்'லென சிரிக்கும் ஒரு கூட்டம் போதும் உண்மைக்கான தேடலைக் கொன்றுவிட.

We are unregulated thinkers!

வரலாற்றிலேயே முதன்முறையாக அதிகமாக வாசித்தும் முட்டாள்களாக இருக்கும் தலைமுறை உருவாகி இருக்கிறது.

அது நாம்தான்!

Also Read: “திரைக்கதையாகவும் சுவாரஸ்யம் இல்லை.. காட்சிகளும் ஈர்க்கவில்லை” : ‘ரத்தசாட்சி’ திரைப்பட விமர்சனம்!