Viral
“காதல் தோல்வியுற்றவர்களுக்கு மட்டும் ரூ.5க்கு ஸ்பெஷல் டீ” -கல்லூரி மாணவர் அமைத்த டீ கடையின் சுவாரஸ்ய கதை!
மத்தியப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், காதல் தோல்வியுற்றவர்களுக்கு மட்டும் ரூ.5க்கு ஸ்பெஷல் டீ கொடுத்து வரும் நிகழ்வின் பின்னணி குறித்து பார்க்கலாம்.
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கரில் பகுதியைச் சேர்ந்தவர் அந்தார் குர்ஜர் (Antar Gurjar). இவர் அந்த பகுதி கல்லூரி ஒன்றில் பி.ஏ இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், அவரது உறவினர் பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியில் சந்தித்த இருவரும், பின்னர் தொலைபேசி வாயிலாக நண்பர்களாக பழகி பேசிக்கொண்டனர். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இப்படி இருக்கையில் ஒரு நாள் அந்த பெண், இவரிடம் பிரேக் அப் செய்துகொள்வதாக கூறியுள்ளார்.
மேலும் தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும், உனக்கு வருமானம் எதுவும் இல்லை என்றும் கூறி அவரை விட்டு வேறொருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அதோடு அவரிடம் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான அந்தர், தற்கொலை செய்துகொள்ள முற்பட்டுள்ளார். பின்னர் அவரது நண்பர்கள் அவரை மீட்டு அறிவுரை வழங்கினர். இதில் மனம் மாறிய அந்தர், தனது காதலி முன் கெத்தாக வாழ வேண்டும் என்று நினைத்து தற்போது அந்த பகுதி கில்ஜிபூர் பேருந்து நிலையம் அருகே டீ கடை அமைத்து நடத்தி வருகிறார்.
இந்த டீ கடைக்கு அவரது காதலியின் பெயரின் முதல் எழுத்தான 'M' என்பதை சேர்த்து 'M Bewafa Chaiwala' என்று பெயர் வைத்துள்ளார். ஏனென்றால் ஒரு முறை இவரது காதலி, ஏதேனும் கடை திறந்தால் அதற்கு தனது பெயரை வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். எனவே அதன்படி தற்போது அவரது பெயரை இதில் சேர்த்துள்ளார்.
இந்த கடையின் ஸ்பெஷல் என்னவென்றால், சாதாரண நபர்களுக்கு ஒரு டீ-யின் விலை ரூ.10 என்றும், காதல் தோல்வியடைந்தவர்களுக்கு மட்டும் இங்கு ரூ.5-க்கு டீ என்றும் விற்கப்படுகிறது. இது தற்போது அந்த பகுதியில் பெரும் வரவேற்பை பெற்று பேசுபொருளாக அமைந்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Also Read
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!