Viral

25 ரொட்டிகள் சாப்பிட்டதால் தூங்கி விட்டேன்.. பணி நேரத்தில் தூங்கிய போலிஸின் கடிதம் இணையத்தில் வைரல் !

உத்தரப்பிரதேசத்தில், ராம் ஷெரீப் யாதவ் என்ற காவலர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 10-ம் தேதி லக்னோவிலிருந்து சுல்தான்பூர் காவல் பயிற்சிப் பள்ளிக்கு பயிற்சிக்காக வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சக காவலர்கள் ராணுவ வீரர் குறித்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதை கேட்டுக்கொண்டிருந்த காவலர் ராம் ஷெரீப் அங்கேயே உறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மேல் அதிகாரி இதைக் கண்டு ஆத்திரமடைந்து தூங்கிக்கொண்டிருந்த காவலரை எழுப்பி அவரை கடுமையாக திட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தான் உறங்கியது குறித்து காவலர் ராம் ஷெரீப் கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள காரணங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில் பயிற்சிப் பள்ளிக்கு வரும்போது பசியுடன் வந்துசேர்ந்தேன். அடுத்த நாள் காலையில்தான் உணவு கிடைத்தது. அப்போது கடுமையான பசியில் இருந்த நான் 25 ரொட்டிகள், ஒரு தட்டுச் சாதம், இரண்டு கிண்ணங்கள் பருப்பு, ஒரு கிண்ணம் காய்கறிகளைச் சாப்பிட்டுவிட்டேன்.

இது எனக்கு கடுமையான சோம்பலை ஏற்படுத்தியதால் அசதியில் தூங்கிவிட்டேன். இனிமேல் இது மாதிரியான தவறு நடக்காது என உறுதியளிக்கிறேன் என தனது கடிதத்தில் கூறியுள்ளார். அவரின் இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பதிவிட்டுள்ள பலர் மேல் அதிகாரிகள் உரிய உணவை ஏற்பாடு செய்திருந்தால் அந்த காவலர் அவ்வாறு உறங்கியிருக்கமாட்டார் என்றும், இதனால் தவறு அதிகாரிகள் மீதுதான் இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.

Also Read: இரண்டாவது முறையாக ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம்.. Iphone தொடர்பான கட்டுப்பாட்டை மாற்றுமா ஆப்பிள்?