Viral

“சமூகவலைதளத்தில் பரவும் குழந்தைகள் காணொளிகள்” - ஒரு குழந்தையை என்னவாக வளர்க்கிறோம்?

ஒரு குழந்தையை என்னவாக வளர்க்கிறோம்?

இன்றைய சமூகதளப் பெருக்கத்தில் ‘சந்தோஷ் சுப்ரமண்ய’ ஜெனிலியாக்களால் பூவுலகு கூசிக் கொண்டிருக்கையில், இன்னுமே பெண் குழந்தைகளை பாவனைகள் பூசியே வளர்க்க முற்படுகிறோம்.

கண்களின் அனர்த்த அகல விரிப்புகள், வலிந்து வரவைக்கப்படும் சிரிப்புகள், கொஞ்சல் மொழிகள், வெற்று கவிதை மயக்கங்கள், பாசாங்கான மிகைகள், பாவனைகள், கண் செருகல்கள், நடைகள், போலியான உறவாடல்கள் என பூமியின் சரிபாதி பாலினத்தை அதன் இயல்பொழித்து வளர்த்து என்னவாக்க போகிறோம்?

சமூகதளத்தில் பரவும் குழந்தைக் காணொளிகளை பாருங்கள். அக்குழந்தையின் தகப்பன் என்ன மாதிரியான பெண்களை திரைகளில் பார்த்து ரசித்திருப்பான் என்பது குழந்தையிடம் தெரிகிறது. அதன் தாய் எப்படியெல்லாம் ஆக வேண்டுமென இளமையில் விரும்பியிருப்பாள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அவை அத்தனையும் மேலோட்டு பாசாங்கு மட்டுமே. ஆனால் இந்த பாசாங்கெல்லாம் எதன் காரணமாக கற்பிக்கப்படுகிறது?

கற்பிக்கப்படுபவை அத்தனையும் இச்சமூகத்துக்காகவும் அதை இயக்கும் அமைப்புக்காகவும்தான். பெண்ணுக்கு பாசாங்கு கற்பிக்கப்படுகிறதெனில், இச்சமூகம் அதை விரும்புகிறது. சமூகத்தை இயக்கும் அமைப்புகள் அப்படி விரும்புகின்றன.

எல்லா சமூக அமைப்புகளையும் கட்டியவன் ஆண் என்கையில், அவை கற்பிப்பவைகள் மட்டும் எத்தகையதாக இருக்கும்? சூட்சுமம் என்னவென்றால் ஆணை எதிர்க்கும் பெண்களே இத்தகைய பாசாங்கு மிகுந்தவர்களாகவும் சமயங்களில் இருக்கிறார்கள் என்பதுதான். சமூகத்தின் இழைகள் இயங்கும் நுட்பம் அதுதான்.

ஆணை எதிர்ப்பவர்கள் கூட ஆண் போட்ட சட்டகத்துக்குள்ளிருந்துதான் எதிர்க்க வேண்டுமென்பதே நம் சமூக அமைப்புகளின் இயங்குமுறை. கிட்டத்தட்ட Matrix பட பாணிதான். உண்மை என்பது உங்களின் சிந்தனை முறைகளுக்கு வெளியில்தான் இருக்கும். The thinking pattern that caused your enslavement cannot provide you a solution. உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிந்தனைமுறைக்கு வெளியே இருக்கும் எதையுமே புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். புரிந்து கொள்ளவும் மறுப்பீர்கள். இத்தகையப் புரிதல்களை உதறி வெளியே வந்து சிந்திக்கும்போதுதான் உண்மை புலப்படும்.

மேற்குலக சிந்தனை, நவீனம், நவதாராளமயம் என எதை பேசினாலும் அவை யாவும் ஆணுக்கு பயன்படும் பொருளாதார உறவுகளில் இருந்து முளைத்து வருபவை. உங்களுக்கு ஓரளவுக்கு நன்மை செய்வது போல் தோன்றினாலும், பெரும்பலனை அடைந்து கொண்டிருப்பவன் ஆணாகத்தான் இருப்பான். நீங்கள் ஆணுக்கு போகமாக இருக்க வேண்டும். ஒன்று, உங்களை போகமாக ஆக்குவான். அல்லது நீங்களே உங்களை போகமாக ஆக்கிக் கொள்ளும் சிந்தனை மற்றும் வாழ்க்கை முறைகளை வழங்குவான்.

நேரெதிராக மனதில் பட்டதை பேசி, அகங்காரமழித்து, உண்மையை புரிந்து கொள்ள முனைந்து, அறிவு மிளிரும் கண்களுடன் சமூகத்துக்காக சிந்திப்பவளே அழகு, காதல், கவிதை எல்லாம்.

Also Read: மாதவிடாய் தீட்டு உருவானது எப்படி ? - கல்யாணம் செய்த பெண்கள் நெற்றிக்கு மேல் பொட்டு வைப்பது ஏன் ?