Viral

தீர்ந்து போன காதல் கொண்டு தாகம் தணிக்க முடியாது: கற்பு, திருமணம் போன்றவற்றை சமூகம் நிர்பந்திக்கிறதா?

ஒரு விடுகதை ஒரு தொடர்கதை என ஒரு படம். விஜயன் நடித்திருப்பார். அதில் ஒரு காட்சி உண்டு.

விஜயனின் நண்பன் மீது விஜயன் மனைவி காதல் கொள்வார். விஜயன் இல்லா நேரங்களில் தொலைபேசியில் உறவு வளர்ப்பார்கள். ஒருமுறை வெளிநாட்டுக்கு விஜயன் செல்லும்போது, நண்பனும் மனைவியும் வெளியே சென்று தங்குவதென முடிவெடுக்கிறார்கள்.

அந்த நாளும் வருகிறது. விஜயனை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, 'மிஸ் பண்ண' போவதாய் அழுது வடித்து வழியனுப்புவார் மனைவி. வெளியேறியதும் தனக்கான உடைகளை எடுத்துக்கொண்டு நண்பனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுவிட்டு சந்திக்க கிளம்புவார் விஜயன் மனைவி.

சந்தித்து கொள்வார்கள். ஊர் சுற்றுவார்கள். பின்பு ஒரு லாட்ஜில் சென்று அறை எடுப்பார்கள். அறைக்குள் சென்றதும் நண்பன் குளித்து முடித்து வருவான். அவள் ஈர்ப்பு கொள்வாள். இருவரும் உறவு கொள்வார்கள்.

பக்கத்து அறையில், விமானம் கேன்சலாகி விஜயன் வந்து தங்கி இருப்பார்.

மாலையில் போலீஸ் ரெய்டு நடக்கும். தன் அறையில் போலீஸ் சோதனை செய்து கொண்டிருக்கையில் வெளியே வந்து சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பார் விஜயன். பரிச்சயப்பட்ட குரல் கேட்டு திரும்புகையில், அங்கு அடுத்த அறையில் அவர் மனைவியும் நண்பனும் நின்று கொண்டிருப்பார்கள். போலீஸ் விசாரித்து கொண்டிருப்பார். 'தாங்கள் புதுமண தம்பதிகள்' என நண்பன் சொல்வார். மனைவி ஆமோதித்து கொண்டிருப்பார். போலீஸ் நம்ப மறுத்து, ஜீப்பில் ஏற சொல்லி கொண்டிருப்பார்.

விஜயன் அவர்களிடம் சென்று போலீஸிடம் சொல்வார், 'இவங்க சொல்றது உண்மைதான். இவன் என் ப்ரெண்டு. அவங்க இவர் wife. ரெண்டு பேரும் நியூலி மேரிட் கப்புள்தான்' என.

போலீஸ் சென்றுவிடுவார். மனைவி காலில் விழுவார். நண்பன் கதறுவான். விஜயன் புன்னகைத்து சிகரெட் பிடித்தபடி அவர்களிடம் இருந்து நடந்து செல்வார்.

இதுதான் முதிர்ச்சி.

இங்கு கற்பு, திருமணம் என்ற கற்பிதங்களைக் கூட பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் நம்பிக்கை முடிந்து விடுகிறது.

'அப்படியெனில் உங்கள் நம்பிக்கை பெண்ணின் உடல் மீதுதானா?' என வறட்டுவாதம் புரிய வேண்டாம். நான் சொல்லும் நம்பிக்கை, 'என்னை மட்டும் காதலிப்பதாக சொன்னது', 'என்னை கட்டிப்பிடித்து அழுது மிஸ் பண்ண போவதாக சொன்னது' போன்றவை. அங்கெல்லாம் நான் வெறுமனே manipulate செய்யப்பட்டிருக்கிறேன் என்பதால் வரும் ஏமாற்றத்தைத்தான் சொல்கிறேன்.

'இல்லை, social compulsion-க்காக வாழ்கிறேன்' என சொன்னால் நரகத்தை ருசிக்க தயாராகிறீர்கள் என அர்த்தம். நான் இங்கு குறிப்பிடுவது social compulsionஐத்தான். Social responsibilityயை அல்ல. Responsibility ஏற்காமல் விடுதலை கொள்ள முடியாது. அப்படி கொண்டால் அது தான்தோன்றித்தனம்.

ஒருவரியில் சொல்வதெனில், தீர்ந்து போன காதல் கொண்டு தாகம் தணிக்க முடியாது.

Also Read: காதலித்தால் தனிமை போய்விடுமா?.. தனிமை என்பதுதான் என்ன?