Viral
புறமோ அகமோ.. நம் மன குழப்பங்களை எப்படி அடையாளம் காணுவது?
மனம் கொள்ளக் கூடிய மயக்கங்கள் பல. அது கொள்ளும் மயக்கங்களை பல்வேறு பெயர்கள் சூட்டி அழைக்கிறோம். கர்வம், கோபம், பொறாமை, கழிவிரக்கம் எனப் பல்வேறு பெயர்கள். இன்றையச் சூழலில் புதுப் பெயர்களைக் கொண்டும் மன மயக்கங்களை அடையாளப்படுத்துகிறோம்.
மன அழுத்தம், டென்ஷன், ஸ்ட்ரெஸ், ஹிஸ்டீரியா என மருத்துவ உதவியுடன் புதியப் பலப் பெயர்கள் இன்று புழக்கத்தில் இருக்கின்றன.
மேற்குறிப்பிட்ட எல்லா பெயர்களுக்கும் அடிப்படையாக இருப்பது மனம். மாறி வரும் புறச்சூழலுக்கேற்ப மாறாத மனம் கொள்ளும் மயக்கங்களே இப்பெயர்களுக்கு அடிப்படை.
புறச்சூழல் ஏன் மாறுகிறது, அதை ஏன் மனம் புரிந்து கொள்ள மறுக்கிறது?
குடும்பம், உறவு, தொழில், வருமானம், சமூகம், அரசியல் போன்றவை யாவும் புறச்சூழல். அது கொள்ளும் மாற்றம் முன்னறிவிக்கப்படுவதில்லை. எனவே திடுமென நேரும் அம்மாற்றத்தை ஆராய்ந்து அலசி அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் அவகாசம் மனதுக்கு அளிக்கப்படுவதில்லை. அத்தகைய சூழல்களில்தான் நம் மனம், நமக்கு நெருக்கடி கொடுக்கிறது. மனம் என்கிற பாம்பு விழுங்கிய விலங்காக நம் வாழ்க்கை மாறி விடுகிறது.
புறமோ அகமோ, இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு அடிப்படையில் அவற்றை அடையாளம் காணுவதுதான்.
எப்படி அடையாளம் காணுவது?
சீடர்களிடம் ஒரு சிறு கயிற்றைக் கொடுத்தார் புத்தர். கயிற்றில் பல முடிச்சுகள் போடப்பட்டிருந்தன. முடிச்சுகளின்றி கயிறை நேராக்கி தரச் சொன்னார் புத்தர்.
சீடர்கள் ஒவ்வொருவராக கயிற்றின் முடிச்சை அவிழ்க்க முயன்றனர். சிலரால் சில முடிச்சுகளை அவிழ்க்க முடிந்தது. எந்த முடிச்சையும் அவிழ்க்க முடியாத சிலர் முடிச்சுப் போட்டவரைத் திட்டிக் கொண்டிருந்தனர். சிலர் முடிச்சுகளை அவிழ்க்க முடிந்தாலும் அவை புதிய முடிச்சுகளை உருவாக்கிக் கொண்டிருந்தன.
என்னவென செய்யாமல் குழம்பி சீடர்கள் முடிச்சுகளை அவிழ்க்க முடியவில்லை என புத்தரிடம் கூறினர்.
புத்தர் சொன்னார், "முடிச்சை அவிழ்க்க விரும்பும்போது முடிச்சு எப்படி போடப்பட்டிருக்கிறது என ஆராய வேண்டும். அதற்கு நிதானமும் பொறுமையும் வேண்டும்.
"முடிச்சை அவிழ்க்கும் அவசரத்தில் புதிய முடிச்சுகளே விழும். கோபத்துடன் அவிழ்க்க முயன்றால் எந்த முடிச்சும் அவிழாது. ஒரு பெருந்திட்டத்துடன் முடிச்சை அவிழ்க்க முனைந்தால் மனம் குழம்பும். முடிச்சுப் போட்டவரைத் திட்டிக் கொண்டிருந்தால் மனதுக்குள் முடிச்சு விழத் துவங்கும். விழிப்புணர்வும் நிதானமும் தெளிவும் இருந்தால் முடிச்சை அவிழ்த்து விடலாம்.
"முடிச்சை அவிழ்க்க முடிச்சுகளற்ற மனம் வேண்டும்!"
உடலை வலுவாக்க உடற்பயிற்சி செய்கிறோம். அது போலவே மனதை வலுவாக்க மனப்பயிற்சியும் அவசியம். வேகமாக நம்மை இழுத்துச் செல்லும் வாழ்க்கையின் ஓட்டத்தில் மனப்பயிற்சிக்கு இடமளிக்காத போது மனதில் புரளல்கள் ஏற்படுகிறது.
முடிச்சுகளற்ற கயிறு கிடைக்க முடிச்சு விழுந்த விதத்தை ஆராய வேண்டும். மனம் கொண்டிருக்கும் சிக்கல்களைக் களைய மனதை ஆராய வேண்டும்.
நமக்கான மனதில் நம் அனுமதியின்றி முடிச்சுகள் விழாது. முடிச்சு விழுவதற்கு உதவிய நம் மனப்பாங்கை கண்டறிந்து களைவதே மனம் சிறக்கும் வழி.
குழப்பங்களாற்ற மனம் முடிச்சுகளற்ற கயிறு போல் தெளிவு கொள்ளும்!
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!