Viral

“முற்பிறவி மற்றும் மறுபிறவியை நம்பலாமா, அது உண்மையா?” : மரணத்துக்கு பின் நடப்பது என்ன? - சுவாரஸ்ய தகவல் !

முற்பிறவி என்பது உண்மையாக இருக்க முடியுமா?

முற்பிறவி மற்றும் மறுபிறவி போன்ற நம்பிக்கைகள் உலகின் பல சமூகங்களில் நிலவுகின்றன. மனித ஆன்மாவின் பயணத்தையே பிறவிகளாக விளக்கப்படுகிறது. அதாவது ஒரு மனிதர் இறந்துவிட்டாலும் அவரின் ஆன்மா இறப்பதில்லை. அது அடுத்தடுத்த நபர்களுக்கு தலைமுறைகள் கடந்து பயணிக்கிறது என்கிறார்கள்.

மறுபிறப்பு பற்றிய நம்பிக்கைகளை கிறித்துவ, இஸ்லாம் மதங்கள் நிராகரிக்கின்றன. ஆனால் உலகின் பெரும்பாலான மக்களுக்கு மறுபிறவி நம்பிக்கை இருக்கிறது. இந்து மதம், புத்த மதம், யூத மதம் முதலிய பல்வேறு மதங்களிலும் மறுபிறப்பு செயல்பாடு இடம்பெற்றிருக்கிறது. பிறப்புக்கு முந்தைய, இறப்புக்கு பிந்தைய பயணமாக குறிப்பிடப்படுகிறது.

மறுபிறவி நம்பிக்கைக் கொண்டவர்களை பொறுத்தவரை, ஒருவர் இறந்துவிட்டால், அவரின் ஆன்மா இன்னொருவரின் உடலுக்கு செல்கிறது. நீங்கள் நல்லவராக இருந்திருந்தால், உங்களின் ஆன்மா நல்ல வாழ்க்கையை தேடி அடைந்து பிறப்பெடுக்கும். மோசமானவராக இருந்திருந்தால் ஒரு மோசமான வாழ்க்கையை கண்டு தண்டனையாக பிறப்பெடுக்கும்.

புத்த மதத்தின் தலைவராக கருதப்படுகிற தலாய் லாமாவே மறுபிறப்பு எடுத்தவராகதான் கருதப்படுகிறார். புதிய தலாய் லாமாவை கண்டறிந்து அடையாளம் காட்டுபவரும் மறுபிறவி எடுத்தவராகதான் இருப்பார் என்கிறது புத்த மதம்.

முற்பிறவி பற்றியக் கருத்துகள் பல காலம் உலகெங்கும் விவாதிக்கப்பட்டு வருகிறது. மரணத்துக்கு பின் ஒன்றுமில்லை எனவொருத் தரப்பும் ஆன்மாவுக்கு மரணமில்லை என்றும் தொடர்ந்து மனிதச் சமூகம் விவாதித்து வருகிறது.

மதங்களின் வழியாக நிறுவப்பட்டு, முற்பிறவிக் கருத்துக்கு எதிரில் இருந்து அறிவியல் இத்தனை காலமும் வாதிட்டு வந்தது. ஆனால் சமீப காலத்தில் முற்பிறவி சாத்தியம் என்பதற்கான விளக்கங்கள் அறிவியலின்பக்கத்திலும் அதிகரித்துக் கொண்டு வருவது, மனித சமூகத்தின் விடையில்லா கேள்வியை இன்னும் நீட்டித்துக் கொண்டே செல்கிறது.

பிற உயிர்களிலிருந்து மனித உயிர் வேறுபட்டது. பிற உயிர்களுக்கு இயக்கவென இயற்கை தேவைப்படுகிறது. மனிதனை இயக்கவென சமூகம் தேவைப்படுகிறது. மனிதனை இயக்கும் சமூகம் தகவல்களால் கட்டப்பட்டது. பல விதத் தகவல்கள் சமூகத்தில் உண்டு. குடும்பம், அரசு, அறிவியல், மதம், ஆன்மீகம் என்கிற பலவகைக் கருத்துகள் சமூகம் தொன்றுதொட்டு புழங்கும் தகவல்களையே அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்படுகின்றன. இத்தகைய தகவல்களைக் கையாள்வது எப்படி எனத் தெரிந்து கொண்டதில்தான் பிற விலங்குகளிலிருந்து மனிதன் வேறுபடுகிறான்.

வேட்டைக்கு செல்கையில் பிற விலங்குகளின் கால்தடம் தொடங்கி புதுச்சூழலில் இருக்கும் காலநிலை வரை எல்லாவற்றையும் அவன் புரிந்து கொண்டதற்கு அடிப்படை தொன்றுதொட்டு அவன் சேமித்து வந்த தகவல்களே. அந்த தகவல்களின் சேகரிப்பைதான் பண்பாடு என்கிறோம். ஒவ்வொரு பண்பாட்டிலும் வாழ்க்கையைப் பற்றிப் பல தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு பண்பாட்டுக்கும் பலவித நம்பிக்கைகளும் இருக்கின்றன. அந்த நம்பிக்கைகள் அந்தந்த பண்பாட்டுக்குரிய மக்கள் கூட்டம் உருவாகி வந்த சூழ்நிலைகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

பண்பாடு, இனம், மொழி என எல்லா வரையறைகளையும் கடந்து மொத்த மனித சமூகத்துக்கும் தேவைப்படும் தகவல் ஒன்றிருக்கிறது. மரணத்துக்கு பின் என்ன நேரும் என்ற தகவல்!

மரணத்துக்கு பின் என்ன நேர்ந்தது எனச் சொல்ல எவரும் இருந்ததில்லை. சொன்னவரை நம்புவதற்கான சாத்தியங்களும் இல்லை. ஆனால் அடிப்படையாக மரணத்துக்கு பின் நாம் ஒன்றும் இல்லாமல் போவதாக இருக்கும் உண்மையை மனிதன் ஏற்றுக் கொள்வதில்லை. ஏதோவொரு வகையில், மீண்டும் உயிர் பெற வேண்டும் என மனிதன் விரும்புகிறான். அதற்கு வெவ்வேறு வழிகளை நாடுகிறான். இலக்கியம், வரலாறு, புகழ் என அவன் தேடும் வழிகளில் ஒன்றுதான் மதம். அந்த மதம் என்கிற அமைப்பு இருவகை வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒரு பக்கம் தனி நபரின் ஆன்ம தேடலுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் துணைபுரியும் வேலையை செய்யும் மதம் மறுபக்கத்தில் மக்களை அரசுகள் எந்தத் தடையுமின்றி ஆளுவதற்கான வாய்ப்பைக் கொடுக்கவும் பயன்படுகிறது.

ஆண்டாண்டு காலமாக வரலாறாகவும் தனிக்கதைகளாகவும் குடும்பக் கதைகளாகவும் குவிந்து கிடக்கும் தகவல்களில் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதச் சமூகத்துக்கு மதம் என்கிற அரசின் கருவியின் வழியாக முற்பிறவி என்கிற கருதுகோள் ஆழமாக நடப்பட்டது.

பல விஷயங்கள் எளிமையாயின.

வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டால் எவரும் அரசை குறை சொல்ல வேண்டியிருக்கவில்லை. முற்பிறவியில் செய்ததன் விளைவு எனத் தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்டார்கள். எவரும் தேர்ந்தெடுக்காமல் ஓர் அரசனோ மதத் தலைவனோ நியமிக்கப்பட்டாலும் கேள்வி கேட்க எவரும் இல்லை. முற்பிறவியின் பயனாக அவருக்கு அந்தப் பதவி கிடைத்ததாக நம்ப வைக்கப்பட்டார்கள்.

தங்களின் அந்தரங்க ஆசைகளும் சொல்லொண்ணாத் துயர்களும், தொடங்கப்படாத அடுத்தப் பிறவியில் சரியாகி விடும் என நம்பி வாழ்க்கை ஓட்டும் சமூகம் ஒன்று வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.

18ம் நூற்றாண்டில் நேர்ந்த மறுமலர்ச்சி, அறிவொளிக் காலம் முதலியவற்றின்போது மதங்களின் மூடத்தனம் வெளுக்கப்பட்டது. மத பீடங்கள் நொறுக்கப்பட்டன. மதத்தில் அதிகாரம் குறைக்கப்பட்டது. அரசர்களின் காலம் முடிவுக்கு வந்தது. ஜனநாயக அரச வடிவங்கள் உருவாகி உலக நாடுகளில் அரசாண்டன.

ஆனால், மனிதச் சமூகத்தின் அடியாழ நம்பிக்கைகள் இன்னும் மிச்சம் இருக்கிறது. அவை அறிவியல் வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாமல் அறிவியலின் மோசமானப் பக்கங்களுடன் கைகோர்த்து தம்மை நிரூபித்துக் கொள்ள முயலுகிறது. அத்தகைய நம்பிக்கைகளில் ஒன்றுதான் முற்பிறவி நம்பிக்கை, பூர்வஜென்ம நினைவு ஆகியவை.

மதமும் அரசும் ஆடிய ஆட்டத்துக்காக உருவாக்கப்பட்ட முற்பிறவி நம்பிக்கை, அறிவியலும் அரசும் சேர்ந்து அதே ஆட்டத்தை இன்று ஆட பயன்படுத்தப்படுகிறது.

மனிதனின் உயிர் என்பது இருத்தலில்தான் இருக்கிறது.

இருத்தல் என்பது இங்குதான் இருக்கிறது.

இறப்புக்கு பிறகு இருத்தலும் இல்லை. சமூகமும் இல்லை. மனிதனும் இல்லை.

மறுபிறப்பும் முற்பிறவியும் பூர்வ ஜென்ம நினைவும் வாழ்வது மனித மனங்களில் மட்டும்தான்!

Also Read: மக்களே எச்சரிக்கை.. செல்போன் பேச்சுகளை ஒட்டு கேட்கும் Pegasus செயலி குறித்து ‘பகீர்’ தகவல்!