Viral

தக்காளி, சிலிண்டரை பாதுகாக்க SECURITY தேவை - ரூ.10 ஆயிரம் ஊதியம் : தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம்!

ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு தக்காளி வரத்து குறைந்ததால் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு மேல் விற்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு அரசு, தக்காளியைப் பதுக்கி அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படம் என்றும் நியாய விலைக் கடை, பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்கப்படும் என தெரிவித்தது.

பின்னர், மாநிலங்களில் மழை குறைந்ததை அடுத்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ரூ.40 வரை தக்காளி விலை குறைந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தக்காளி விலை உயருமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.

அதேபோல், ஒன்றிய அரசு தொடர்ச்சியாக சிலிண்டர் விலையை உயர்ந்து வருகிறது. இதனால் வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 2 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இது சிறு நிறுவனங்கள், கடைகள், மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தக்காளி பெட்டியையும், கேஸ் சிலிண்டரையும் பாதுகாக்க அனுமதியுடன் துப்பாக்கி வைத்துள்ள security தேவை என தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம் செய்துள்ளது.

அந்த விளம்பரத்தில், தக்காளி பெட்டியையும், கேஸ் சிலிண்டரையும் பாதுகாக்க license உடன் gun man security guard வேலைக்கு ஆட்கள் தேவை. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை. மாத ஊதியம் ரூ.10 ஆயிரம். தங்கும் இடம் உணவு இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தொப்பி வாப்பா பிரியாணி கடையின் இந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தை நெட்டிசன்கள் பலரும் சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Also Read: வரதட்சணை பணத்தை இப்படியும் பயன்படுத்தலாம்.. மணமகளின் முடிவிற்குக் குவியும் பாராட்டு: காரணம் என்ன?