Viral

காயமடைந்த சிறுவனுக்கு ‘பிகில்’ படத்தை காட்டி சிகிச்சையளித்த மருத்துவர்கள்... சென்னையில் சுவாரஸ்ய நிகழ்வு!

சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சசிசர்ஷன், தன்னுடைய உறவினருடன் கடந்த 6ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்றுள்ளான். அப்போது அண்ணாசாலை பட்டுலாஸ் சாலை அருகே சென்றபோது, பின்சீட்டில் அமர்ந்திருந்த சிறுவன் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளான்.

அதில், தலை, நெற்றி மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நெற்றியில் இருந்த காயத்திற்கு தையல் போட முடிவு செய்து ஊசி போட முயன்றனர். ஆனால், பயத்தில் ஊசி வேண்டாம் என சிறுவன் அழுது அடம்பிடித்து சிகிச்சைக்கும் ஒத்துழைக்க மறுத்துள்ளான்.

மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் என்ன செய்வது என தெரியாமல் மருத்துவர்கள் திணறினர். அப்போது அங்கு பணியாற்றிய தன்னார்வலர் ஜின்னா என்பவர் சிறுவனை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டார்.

அப்போது அவரிடம் பேசத் தொடங்கிய சிறுவனிடம் ஜின்னா, உனக்கு என்ன பிடிக்கும் என கேட்டபோது, தனக்கு நடிகர் விஜய்யைதான் பிடிக்கும் என்று கூறியுள்ளான். மேலும் தான் விஜய்யின் தீவிர ரசிகன் என்றும் சிறுவன் கூறியதால், தனது செல்போனில் வைத்திருந்த நடிகர் விஜய் நடித்த ’பிகில்’ படத்தைப் போட்டு சிறுவனிடம் ஜின்னா கொடுத்துள்ளார்.

அப்போது வலியை மறந்து சிறுவன் ’பிகில்’ படம் பார்த்துக்கொண்டிருந்த போது, மருத்துவர்கள் சிறுவனுக்கு தையல் போட்டு சிகிச்சை அளித்தனர். விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு சினிமா படம் காண்பித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “புதிய ஒன்றிய அமைச்சரை சந்தித்து AIIMS மாணவர் சேர்க்கை பற்றி எடுத்துரைப்போம்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்