Viral

லாக் டவுனால் வீடியோ காலுக்கு அதிகரித்த மவுசு... வாட்ஸ் அப் கொடுத்த மாஸ் அப்டேட்! - பயனர்கள் உற்சாகம்!

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பொதுவெளியில் நடமாடுவது அதிகளவில் குறைந்திருக்கிறது. இதனால், பொழுதுபோக்குக்காக மக்கள் டிவி மற்றும் செல்ஃபோனையே நம்பி காலத்தைக் கடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் அனைத்து நாடுகளிலும் இணையத்தின் பயன்பாடும், தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், ஊரடங்கு காரணமாக ஐ.டி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர்.

உயரதிகாரிகளுடன் மீட்டிங் போன்றவற்றில் கலந்துகொள்ள வீடியோ கான்ஃப்ரங்கிங் செயலிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. அதேபோல, வீட்டில் உள்ளவர்கள் தங்களது நண்பர்கள் உறவினர்களுக்கு வீடியோ கால் மூலம் பேசி பொழுதைக் கழித்து வருகின்றனர்.

இது போன்ற தேவைகளுக்காக இருந்த ஜூம் செயலி சைபர் க்ரைம் தாக்குதலுக்கு ஆளாவதால், அது பாதுகாப்பானது அல்ல என அண்மையில் இந்திய மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும், பயனர்கள் கூகுள் மீட் போன்ற இதர வீடியோ சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

வீடியோ கால் சேவைக்கு மவுசு அதிகரித்துள்ளதால், தற்போது வாட்ஸ்-அப் நிறுவனமும் வீடியோ கால் சேவைக்கு அப்டேட் கொடுக்க முன்வந்துள்ளது. ஏற்கெனவே குரூப் வீடியோ காலில் ஈடுபட 4 பேரை மட்டுமே இணைக்க முடியும் இருந்த நிலையை மாற்றி 4 பேருக்கு மேல் வீடியோ கால் செய்யும் வகையில் புது அப்டேட்டை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தச் செய்தி ஊரடங்கு காலத்தில் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பயனர்கள் இந்த வசதியின் மூலம் பெருமளவில் பயனடைவர் எனவும் கூறப்படுகிறது.

Also Read: "ZOOM செயலி பாதுகாப்பானது அல்ல" - வீடியோ கான்ஃப்ரன்ஸ் செய்ய மத்திய அரசு நெறிமுறைகள் அறிவிப்பு !