Viral

திருமணத்தை நிறுத்த நூதன திட்டம் போட்ட மணமகனுக்கு நேர்ந்த சோகம் - பெங்களூருவில் விநோத சம்பவம் !

பெங்களூருவைச் சேர்ந்தவர் கிரண் குமார் (30). அமெரிக்காவில் பணியாற்றும் இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில், தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் மணமகள் வீட்டாரிடம் தனக்கு எச்.ஐ.வி நோய் இருப்பதாகக் கூறிய கிரண் குமார், உங்கள் பெண்ணை நான் மணமுடித்தால் அவருக்கும் இந்த நோய் தொற்றிக்கொள்ளும் எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் வீட்டார், இந்த விஷயத்தை முன்பே சொல்லியிருக்கக் கூடாதா என புலம்பித் தீர்த்துள்ளனர்.

இதனையடுத்து கல்யாணத்தைத் தள்ளிவைத்த பெண் வீட்டார், கிரண் குமாரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அவருக்கு எந்த நோயும் இல்லையென தெளிவாகியுள்ளது. இது இரு வீட்டாரையும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பின்னர் கிரண் குமாரிடம் விசாரித்ததில், “எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. என்னை கட்டாயப்படுத்தியே இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர். எப்படியாவது நிறுத்திவிடவேண்டும் என நினைத்து இப்படிக் கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 1ம் தேதி திருமணம் நடைபெறவிருந்ததால் மண்டபம் உள்ளிட்ட பலவற்றுக்கு லட்சக்கணக்கில் பெண் வீட்டார் முன்பணம் கொடுத்துள்ளனர். இதற்கிடையே மணமகன் இவ்வாறு கூறியதால் அதிருப்திக்குள்ளான பெண் வீட்டார் அவர் மீது மோசடி புகார் கொடுத்துள்ளனர்.

இதற்கு பிறகு கிரண் குமார் மற்றும் அவரது குடும்பத்தார் என ஐவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அனைவரும் ஜாமினில் வெளியே வந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.