Viral

41 வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட தாய்-மகன் : சென்னை அருகே நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னையை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி - தனலட்சுமி தம்பதியர். தனலட்சுமிக்கு கடந்த 1976ம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே இன்னொரு மகனும் இருந்துள்ளார். தனலட்சுமியின் குடும்பம் வறுமையில் வாடியது. வறுமை காரணமாக தனது இரண்டு மகன்களை பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகம் ஒன்றில் சேர்த்துள்ளார்.

சில தினங்களுக்குப் பிறகு தன் பிள்ளைகளை தனலட்சுமி பார்க்கச் சென்றுள்ளார். அப்போது தனது இரண்டு மகன்களும் காப்பகத்தில் இல்லாதது கண்டு கடும் அதிர்ச்சியுற்ற தனலட்சுமி இதுபற்றி காப்பகத்தில் உள்ளவர்களிடம் கேட்கவே 2 குழந்தைகளையும் டென்மார்க்கை சேர்ந்த இரண்டு தம்பதிகள் தத்து எடுத்துச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

டென்மார்க் நாட்டில் வாழும் டானிஸ் எனும் தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தை, டேவிட் கில்டென்டல் நெல்சன் என்ற பெயருடன் வளர்க்கப்பட்டு தற்போது, வங்கி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நீண்ட வருடங்களாகவே தன் தாயைக் காண வேண்டும் என்கிற தேடல் டேவிட்டிடம் இருந்துள்ளது. டென்மார்க்கில் உள்ள வளர்ப்பு பெற்றோரின் சம்மதத்துடன் தனது தாயைத் தேடி டேவிட் சாந்தகுமார் இந்தியா வந்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் தனது சொந்த தாயை தேடி தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் தனியாக தேடி அலைந்திருக்கிறார் டேவிட். பின்னர் தனது சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது தாயை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னரே தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அருண் டோ லே என்பவரை சந்தித்து தனது கையில் இருந்த புகைப்படத்தை கொடுத்து தனது தாயை கண்டுபிடித்துத் தருமாறு டேவிட் கூறி இருக்கிறார்.

பின்னர் நடந்த பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக டேவிட்டின் தாயார் தனலட்சுமி மணலியில் ஒரு சிறு வீட்டில் தனது இளைய மகன் சரவணனுடன் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் தனது தாய் உடன் முதன்முறையாக வீடியோ கால் மூலம் டேவிட் பேசியிருக்கிறார். இதன்பின்னர் நேற்று முன்தினம் மணலியில் தனது தாய் குடியிருக்கும் வீட்டிற்கு நேரே சென்று தாயைச் சந்தித்தார்.

இரண்டு வயதில் தமிழகத்திலிருந்து தத்து கொடுக்கப்பட்ட டேவிட் தற்போது டென்மார்க்கில் வசித்துவருவதால் தமிழை முழுவதுமாக மறந்துவிட்டதால் மொழிபெயர்ப்பாளர்களின் துணைகொண்டு தனது தாயிடம் பேசினார்.

விரைவில் தனது அண்ணன் ராஜன் டென்மார்க்கில் வாழ்ந்து வருவதாகவும் அவரை நேரில் அழைத்துவந்து தனது தாயை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.