Viral

2,600 அடி உயரத்தில் செயலிழந்த பாராசூட்... பயிற்சி மேற்கொண்ட சாகச வீரர் பரிதாப பலி - அதிர்ச்சி வீடியோ!

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் மிக்கெயில் ரோக்கோரோவ். அந்நாட்டின் புலனாய்வுத் துறை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

இவர் மீட்புப் பணிக்கு செல்லும்போது ஹெலிகாப்டரில் இருந்து குதித்து பாராசூட் மூலம் தறையிறங்குவார். அதற்காக அடிக்கடி ஹெலிகாப்டரில் சென்று பாரசூட் மூலம் குதித்து பயிற்சி மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி தனது வழக்கமான பயிற்சியை மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டரில் பயணித்துள்ளார். ஹெலிகாப்டர் 2,625 அடி உயரத்தில் பறந்துள்ளது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மிக்கெயில் குதித்துள்ளார்.

ஆனால், எதிர்பாராவிதமாக பாரசூட் திறக்காமல் பழுது ஏற்பட்டுள்ளது இதனால் புவி ஈர்ப்பு விசையின் வேகத்தில் கீழே தரையில் விழுந்த மிக்கெயில் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் விமானத்தில் பயணம் செய்த சக வீரர்கள் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். மிக்கெயில் விழுந்த இடத்தைக் கண்டுபிடித்த போலிஸார் சிதைந்து கிடந்த சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் அனுபவம் வாய்ந்த மிக்கெயில் எப்படி இறந்தார் என விசாரித்து வருகின்றனர். மேலும், முறையான பாதுகாப்பு இல்லாமல் இதுபோல சாகசப் பயிற்சிகள் மேற்கொள்ளக் கூடாது என போலிஸார் அறிவுறுத்திவருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் அந்த வீடியோவில் முதலில் உற்சாகமாக எழும்பிய அவரின் குரல் அடுத்து வேதனைக்குரியதாக மாறியது. இந்த வீடியோ பார்ப்பவர்களை நடுங்கச் செய்துள்ளது.