Viral
“யூடியூப் வீடியோ பார்த்து ATM-ல் கொள்ளையடிக்கச் சென்றோம்” - கல்லூரி மாணவர்களின் வாக்குமூலத்தால் பரபரப்பு!
இணையத்தை நல்வழியில் பயன்படுத்தி தத்தமது திறமைகளை வளர்த்து வருகின்றனர் பலர். ஆனால், ஒருசிலரோ இணையத்தை தவறான வகையில் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வகையில், காஞ்சிபுரம் அருகே யூடியூப் வீடியோ பார்த்து வங்கி ஏ.டி.எம்மை கொள்ளை அடிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இருவர் காவல் துறையினரிடம் சிக்கிய சம்பவம் நடந்தேறியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் படப்பை கரசங்கால் பகுதியில் அமைந்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம். இந்த ஏ.டி.எம் மையத்தில் நுழைந்த இரு வாலிபர்கள் கதவினை மூடிவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்தபோது அதிலுள்ள சமிக்ஞை மூலம் மும்பை தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றதன் பேரில் மும்பை அலுவலகத்தில் இருந்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
ஓட்டேரி மற்றும் மணிமங்கலம் காவல்துறை விரைந்து வந்து கொள்ளையடிக்க முயற்சித்த இரு வாலிபர்களை கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த இறையன்பு மற்றும் யோகேஷ் என்ற தனியார் கல்லூரி மாணவர்கள் எனத் தெரியவந்தது.
இருவரும் யூடியூப் சேனலில் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை அடிப்பது குறித்த வீடியோவை பார்த்து அதன்படி முயற்சித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். ஏ.டி.எம் மையத்தில் கொள்ளையடிக்க இணையதளத்தை பார்த்து கற்றுக்கொண்டதாக அவர்கள் கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இதுபோன்று வேறு ஏதேனும் வங்கி கிளைகளில் முயற்சி செய்துள்ளனரா என மணிமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யூடியூபை பார்த்து ஏ.டி.எம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!