Viral

உலகமே பரிதாபப்பட்ட ‘டிக்கிரி’ யானை உயிரிழப்பு... அன்பை போதித்த புத்தரின் கோவிலில் அடிமையாக கொடுமரணம்!

இலங்கையின் கண்டியில் உள்ள ஒரு கோவிலில் புத்தரின் பல் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

இந்தத் திருவிழாவுக்காக நடத்தப்படும் பேரணியில், நூற்றுக்கணக்கான யானைகள் பங்கேற்கும். யானைகளுக்கு அலங்காரம் செய்து, இந்தப் பேரணியில் பல கிலோமீட்டர் தூரம் நடக்க வைப்பார்கள்.

இந்தப் பேரணியில் பங்கேற்ற ‘டிக்கிரி’ என்கிற யானையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. டிக்கிரி என்ற 70 வயதான எலும்பும் தோலுமாக உள்ள இந்த யானையை திருவிழா பேரணியில் பயன்படுத்தக்கூடாது என தாய்லாந்தைச் சேர்ந்த 'Save elephant' என்ற அமைப்பு வலியுறுத்தியது.

எலும்பும் தோலுமாக உள்ள டிக்கிரியின் உடல் மக்களுக்குத் தெரியாமல் பட்டாடைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. உடல்நிலை மிகமோசமாக இருக்கும் டிக்கிரி மக்களின் கூச்சல், பட்டாசு சத்தங்களுக்கு இடையே நடத்திச் செல்லப்படுகிறது. யானையை சித்ரவதைக்குள்ளாக்குவது தடுக்கப்படவேண்டும் என கண்டனக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் ‘டிக்கிரி’ யானை உடல்நலக் குறைவால் நேற்று மாலை உயிரிழந்தது. டிக்கிரியின் மறைவு, அதன் மேல் இரக்கம் கொண்டு அதைக் காப்பாற்றுமாறு குரல் எழுப்பிய அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.