Viral

போலீஸ் காவலில் இருந்து தப்பித்த கைதி : கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி! நடந்தது என்ன?

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள மும்முடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் கடந்த ஜூன் மாதம் கடத்தப்பட்டார் என அவரது தம்பி தலைவாசல் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், அண்ணன் மணியை ஜூன் மாதம் 24ம் தேதி ஒருவர் காரில் கடத்திச் சென்றதாகவும், அவரை விடுவிக்க 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புகாரில் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தி வந்தனர். தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வந்தபோது இந்த வழக்கில் 5 பேருக்குத் தொடர்பு இருப்பதாக கண்டுபிடித்த போலீசார், அவர்களை தேடிபிடித்துக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிடிப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட விசாரணையில் முக்கிய குற்றவாளி மயிலாடுதுறை அருகே உள்ள நீடுர் கிராமத்தை சேர்ந்த விஜயன் என்று தெரியவந்தது. பின்னர் தனிப்படை போலிசார் விஜயனின் இருக்கும் இடத்தை அறிந்து அவரை நேற்றுக் கைது செய்து செய்தனர். விஜயனைக் கைது செய்த போலீசார் தலைவாசல் காவல் நிலையத்திற்கு வாகனத்தில் அழைத்து வந்துள்ளனர்.

அப்போது நத்தகரை சுங்கச் சாவடி அருகில் செல்லும் போது, வாகனத்திலிருந்து கீழே குதித்து விஜயன் தப்பி ஓடியுள்ளார். அதிர்ச்சி அடைந்த போலீசார் வாகனத்தை நிறுத்தி விஜயனை பிடிக்க முயன்றார்கள். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்கச் சாலையிலிருந்து வெளியே குதித்து விஜயன் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார். விழுந்ததில் விஜயனின் காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் விஜயனை சேலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு விஜயனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரைக் கண்காணிக்க போலீசார் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் உண்மையா அல்லது போலீசாரே அவரை அடித்து கால்களை உடைத்து விழுந்துவிட்டு விழுந்து அடிபட்டார் என கூறுகிறார்களா என்று பலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.