Viral

உணவு டெலிவரியில் களமிறங்க திட்டம்... ஊபர் ஈட்ஸை வாங்குகிறதா அமேசான்?

பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பெரும்பாலானோர் வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கம் தற்போது வழக்கொழிந்து போய்விட்டது. ஹோட்டலில் சென்று சாப்பிடும் வழக்கமும் போய், தற்போது இருக்கும் இடத்திலிருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும்; நம்மிடத்தைத் தேடி உணவு வரும் என்கிற நிலை வந்துவிட்டது.

இந்தியாவில் இந்த உணவு டெலிவரி செய்யும் சேவை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் நடுத்தர மக்களே பெரும்பாலும் ஆன்லைன் ஃபுட் டெலிவரி செயலிகளை பயன்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவைச் சேர்ந்த ஸ்விக்கி, ஸொமேட்டோவின் பயன்பாடு அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கால் டாக்ஸி நிறுவனமான ஊபர் மற்ற நாடுகளை போன்று இந்தியாவிலும் உணவு டெலிவரி சேவையை ஊபர் ஈட்ஸ் என்ற பெயரில் செய்து வருகிறது.

இருந்தாலும், ஸ்விக்கி, ஸொமேட்டோவிற்கு இணையாக போட்டியிட முடியாமல் ஊபர் ஈட்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு வருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. ஆகையால், ஸ்விக்கியும், ஸொமேட்டோவும் ஊபர் ஈட்ஸை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் உலகின் முன்னணி ஆன்லைன் நிறுவனமான அமேசான் ஊபர் ஈட்ஸை வாங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ், செல்போன் உட்பட வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்துவரும் அமேசான் நிறுவனம், தற்போது உணவு டெலிவரியிலும் கால்பதிக்க முடிவெடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் செப்டம்பர் மாதம் முதல் பண்டிகை நாட்கள் ஆரம்பமாகும் என்பதால், அந்த மாதமே உணவு டெலிவரி சேவையை தொடங்கவும் அமேசான் இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.