Viral

திவால் ஆகும் அனில் அம்பானியின் இன்னொரு நிறுவனம் : 9 ஆயிரம் கோடி கடனை கட்டி காப்பாற்றுவாரா அண்ணன் முகேஷ்?

இந்தியாவின் மிக முக்கிய பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. இவருடைய ரிலையன்ஸ் கார்ப்ரேட் நிறுவனத்திற்கு மோடி அரசு அனைத்து சலுகைகளையும் வாரி வழங்கி வருகிறது. இதனால் முகேஷ் அம்பானி அனைத்து தொழில்களிலும் லாபத்தை சம்பாதித்து இந்தியாவின் பணக்காரர்களில் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

ஆனால் அவரின் சகோதரர் அனில் அம்பானியின் தலைமையின் கீழ் இருக்கும் தொழில்கள் அனைத்தும் சமீபகாலமாக நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் அடையும் நிலைக்கு சென்றதால், அந்நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலத்தில் எடுக்கப்போவதாக செய்திகள் வெளியானது.

மேலும் தற்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. 9 ஆயிரம் கோடி கடனில் உள்ள அந்த நிறுவனத்தை முகேஷ் அம்பானி ஏழத்தில் எடுக்கப்போவதில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், 9 ஆயிரம் கோடி கடனில் உள்ள அந்த நிறுவனம் அனில் அம்பானியின் கையை விட்டுப் போகும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக விஜய் மல்லையா வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை கட்டாமல் மோசடி செய்தது போல, அனில் அம்பானியின் நிறுவனமும் வட்டியும், அசலையும் பல மாதமாகியும் கட்டாமல் இருந்துள்ளது. இதனிடையே அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய அனைத்து வங்கிகளும் இணைந்து தற்போது ஐ.டி.பி.ஐ (IDBI)வங்கியின் கீழ் இயங்கி வருகிறது.

இந்நிலையில் ஐ.டி.பி.ஐ வங்கி தலைமைக் குழு வட்டியும், அசலும் செலுத்தாத அனில் அம்பானியின் நிறுவனத்தின் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்தது. மேலும் அந்த நிறுவனம் திவால் என அறிவிக்கும் நோக்கில் ஐ.டி.பி.ஐ செயல்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கும் விதமாக, கடனை திருப்பி செலுத்துவது தொடர்பான திட்ட அறிக்கையை கொடுக்குமாறு ஐ.டி.பி.ஐ வங்கி அறிவித்தது. ஆனால் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும் அந்த அறிக்கையை சமர்பிக்காமல் அனில் அம்பானியின் நிறுவனம் காலம் தாழ்த்தியுள்ளது.

இந்நிலையில் வங்கி நிர்வாகம் தற்போது வங்கி நிர்வாகக் கடனுக்கான அனில் அம்பானியின் நிறுவனத்தை பங்குகளாக மாற்ற முயற்சி எடுத்துவருவதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் கடந்த முறை அண்ணன் முகேஷ் அம்பானி உதவியது போல இந்த முறையும் உதவ வேண்டும் என அனில் அம்பானி கோரிக்கை வைத்து தன்னுடைய நிறுவனத்தைக் காப்பாற்றுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.