Viral

சாதிமறுப்பு திருமணத்திற்கு 2 லட்சம் அபராதம், பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை: குஜராத்தில் நவீன தீண்டாமை

தீண்டாமை, சாதிக் கொடுமைகள், மதவெறி மோசமான நடவடிக்கைகள் சுதந்திர இந்தியாவில் இன்னமும் தொடர்கிறது. இதனை தடுக்க வேண்டிய அரசுகளே பல நேரங்களில் வேடிக்கை பார்க்கிறது என்கிற குற்றச்சாட்டுக் குரல்கள் எப்போதும் உண்டு. நாளுக்கு நாள் பலவழிகளில் தீண்டாமை அதிகரித்துதான் வருகிறது.

அப்படி சமீபத்தில், குறிபிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் செல்போன் கூட பயன்படுத்தக்கூடாது என்கிற நவீன தீண்டாமை நடவடிக்கை பின்பற்றப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பன்ஸ்கந்தா மாவட்டத்தில் தகோர் சமூக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு மேல்சாதியினர் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். மேலும் அவர்களின் பிள்ளைகள் வேறு சாதியைச் சேர்ந்தவர்களை திருமணம் முடித்தால் அவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது போன்ற மோசமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

சமீபத்தில் அந்த ஊரில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில், சாதி மறுப்பு திருமணம் செய்யும் பிள்ளைகளின் பெற்றோர்கள் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் செலுத்தவேண்டும் என்றும், திருமண விழாக்களில் பாட்டுக் கச்சேரி வைக்கூடாது, பட்டாசு வெடிக்ககூடாது, நீண்ட தூரம் ஊர்வலங்களில் செல்லக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்ற செய்தி நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க ஆட்சியில் நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதும், தலித் சமூக மக்கள் மீதும் அதிகரித்து வரும் தாக்குதல்கள் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.