Tamilnadu

பாலியல் குற்றவாளியை காப்பாற்றிய குற்றவாளி முதலமைச்சர் விஜய் : முரசொலி கடும் சாடல்!

முரசொலி தலையங்கம் (26-11-2026)

குற்றவாளிகளைக் காப்பாற்றிய குற்றவாளி !

எவ்வளவு கேவலமான, மோசமான, கிரிமினல் மயமான ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் இன்னமும் சட்டமன்ற உறுப்பினராக இருப்பது.

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, அவருக்குத் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் 'விஜய்' அருள் விக்னேஷ். இது ஜூலை மாதம் 31ஆம் தேதியே மாவட்ட ஆட்சியரால் ஆட்சித் தலைமைக்குப் புகாராகச் சொல்லப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 24ஆம் தேதி வரைக்கும் எந்த நடவடிக்கையும் முதலமைச்சர் விஜய் எடுக்கவில்லை. இது யார் குற்றம்? குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி தானே இன்று முதலமைச்சராக இருக்கும் விஜய்?

நான்கு மாத காலம் ஒரு பாலியல் குற்றவாளியைக் காப்பாற்றியதற்கு முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்க வேண்டாமா? பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டாமா?

அருள் விக்னேஷ் இப்படி நடந்து கொண்டார் என்பதைக் கேள்விப்பட்டதும், அந்தப் பெண் மாவட்ட ஆட்சியருக்கு பேசி, ‘உங்களுக்கு இந்த அரசு பாதுகாப்பாக இருக்கும்' என்று சொல்லி இருக்க வேண்டாமா ‘உங்கள்' விஜய்?

சினிமாவால் பெண்களை ஈர்த்து, சினிமாவைப் போலத்தான் விஜய் நிஜத்திலும் இருப்பார் என்று நம்ப வைத்து, அவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய், வெற்றிக்குப் பிறகாவது திருந்தியிருக்க வேண்டாமா? மனம் மாறி இருக்க வேண்டாமா? பொதுமக்களைத் தான் காப்பாற்ற முடியவில்லை, தெரியவில்லை. ஒரு மாவட்ட ஆட்சியரைக் காப்பாற்றக் கூட முதுகெலும்பு இல்லையா?

அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுத்துவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடுமா? கவிழாது. ஆனாலும் ஏன் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அலட்சியம். நம்மை எவன் கேள்வி கேட்க முடியும் என்ற ஆணவம். அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுத்தால் தனது தூய சக்தி பிம்பம் கிழிந்து தொங்கும் என்ற பயம்.

அதனால் தான் போதைப் பொருள் பயன்படுத்திய வீடியோ வெளியான பிறகும் அமைச்சர் சரத்குமார் இன்னமும் அமைச்சரவையில் நீடிக்கிறார். விஜய் ரசிகையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இரண்டு பேருக்கு உதவி செய்த ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் காப்பாற்றப் பட்டார். அனைத்துத் துறைகளிலும் ஊழல் புகார்கள் வருகின்றன. இப்படி எத்தனையோ அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் வந்தும் விஜய்யால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எடுத்தால் தனது சாயம் வெளுத்துப் போகும் என்று நினைக்கிறார் விஜய்.

‘இனி சவாலோ, வாய் சவடாலோ விட முடியாது' என்று பனையூரில் பதுங்கி விட்டார் விஜய். தன்னை நம்பி வாக்களித்த மக்கள் வேட்டையாடப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய்.

நடந்த சம்பவத்தை விட, நான்கு மாத காலம் இதை நடவடிக்கை எடுக்காமல் மறைத்து வைத்தது தான் மாபெரும் குற்றம்.

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி, கள்ளக்குறிச்சி விவகாரத்தை முதன்முதலில் வெளிப்படுத்திக் கண்டித்தார். நடவடிக்கை எடுக்கச் சொன்னார். அப்போதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ‘யாராக இருந்தாலும் விடமாட்டேன், ஆட்சிக்கு வந்துவிட்டோம்... ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கலாம் என்று யார் நினைத்தாலும் விடமாட்டேன்' என்று சொன்ன விஜய், உடனடியாக இதைச் செய்திருக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்தது? 'கனிமொழி பொய் சொல்கிறார், இது கண்டிக்கத்தக்கது’ என்றார் ஐந்து கட்சி மாறிய, இப்போது அமைச்சர் ஆகி இருக்கும் நிர்மல்குமார். ‘ புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்' என்றார் அமைச்சர் அருண்ராஜ். ‘யாரும் புகார் தரவில்லை' என்றார் அமைச்சர் ராஜ்மோகன்.

‘கள்ளக்குறிச்சி விவகாரம் முதலமைச்சரின் கவனத்தில் உள்ளது' என்றார் அமைச்சர் அருண்ராஜ். எவ்வளவு நாட்களாக சிந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்? என்ன முடிவெடுக்கலாம் என்று முடிவெடுக்க முடியாத அளவுக்கு இது என்ன ஐ.நா. தீர்க்க வேண்டிய விவகாரமா?

ஒரே ஒரு போன் போட்டு ஆட்சியரிடம் கேட்டுவிட்டு, உண்மைதான் என்று உறுதி செய்ததும், அந்த எம். எல். ஏ. வை ராஜினாமா செய்ய வைத்து, கட்சியை விட்டு நீக்கிவிட்டு கைது செய்ய நான்கு நிமிடம் போதும். அதற்கு நான்கு மாதம் பனையூரில் தவம் செய்கிறாரா?

இவர்களோடு போய்ச் சேர்ந்துள்ளார்களே, விஜய்யால் ‘கல்லாப்பெட்டி கட்சிகள்' என்று சொல்லப்பட்டவர்கள் - அவர்கள் என்ன பேசினார்கள்?

‘அய்யோ பாவம் அந்த எம்.எல்.ஏ.' என்றார் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர். சொந்தக் கட்சி பெண் எம்.பி.க்களே மாவட்ட ஆட்சியருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு த.வெ.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்- டும் என்று சொன்ன போது எம். எல். ஏ. வுக்கு ஆதரவாக தனது அருவெறுப்பான பேட்டியை சிரித்துக் கொண்டே கொடுத்தார் மாணிக்கம் தாகூர்.

‘அப்படி எந்தக் குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை' என்று பேட்டி கொடுத்தார் துரை வைகோ. ‘மறுமலர்ச்சி செக்யூரிட்டி சர்வீஸ்' என்று அவர்கள் விரைவில் பெயரை மாற்றிக் கொண்டாலும் யாரும் ஆச்சர்யப்பட மாட்டார்கள். அந்தள- வுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பவர்கள் அவர்கள்.

இவை அனைத்துமே பெண் மாவட்ட ஆட்சியருக்கு விடுக்கப்பட்ட மறைமுக மிரட்டல்கள். மாவட்ட ஆட்சியரை அங்கிருந்து மாற்ற ஆட்சி மேலிடம் முயற்சி செய்ததாகவும், அவர் மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பல்- வேறு நெருக்கடிகளை அந்தப் பெண் ஆட்சியர் இந்த நான்கு மாதகாலமாக சந்தித்து வந்துள்ளார். தலைமைச் செயலாளர் சாய்குமார் என்ன செய்து கொண்டு இருக்கிறார்? அவருக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லையா?

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் பெண் நீதிபதி கொந்தளித்துப் பேசிய பிறகும் நடவடிக்கை இல்லை.

உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தது. அப்போதும், ‘புகார் வரவில்லை' என்றுதான் அரசு வழக்கறிஞரைச் சொல்ல வைத்தார்கள்.

பொறுத்தது போதும் என்று புகார் தர முன்வந்தார் ஆட்சியர். அவரே பயந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? அருள் விக்னேஷ் அடுத்த ஆபாச குறுஞ்செய்தியை அனுப்புவார் . இன்னும் பலருக்கு அனுப்புவார். அவரைப் போலவே த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் இதைச் செய்வார்கள். அமைச்சர் விஜய் பாலாஜி, பெண் எஸ்.பி. யை இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு வரச் சொன்ன விவகாரமும் நடந்துள்ளது.

இதெல்லாம் ஒரு ஆட்சி? இவரெல்லாம் ஒரு முதலமைச்சரா? என்று கேட்கும் கேவலத்தை எத்தனை நாட்கள் பொறுத்துக் கொள்வது?

Also Read: “கோழைகளின் செயல்” : ஈரோட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகள் சேதம் - தங்கம் தென்னரசு கண்டனம்!