Tamilnadu
செல்போன் திருடன் எனக் கேலி செய்ததால் ஆத்திரம் : நண்பனை வெட்டிக் கொன்ற இளைஞர்கள்!
சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், அண்ணா நகர், திருக்குறள் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ். மயான ஊழியராகப் பணியாற்றி வந்த இவர், பல்லாவரம் மலங்காநந்தபுரம் ஏரிக்கரைத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் ஆகாஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆகாஷ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாகப் பல்லாவரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், ஆகாஷின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே ரத்தக்கறை படிந்த ஆடையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த இருவரைப் போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் பல்லாவரம், மலங்காநந்தபுரம், ஏரிக்கரைத் தெருவைச் சேர்ந்த குரு (எ) புருஷோத்தமன் மற்றும் விமல்ராஜ் என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் இருவரும் தங்களது மற்றொரு நண்பருடன் சேர்ந்து ஆகாஷைக் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், கொலையாளிகள் மூவரும் ஆகாஷின் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அனைவரும் பல்லாவரத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, ஆகாஷின் செல்போனை விமல்ராஜ் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அன்றிலிருந்து ஆகாஷ், விமல்ராஜைத் தொடர்ந்து 'செல்போன் திருடன்' எனக் கூறி கேலி செய்து வந்துள்ளார்.
நேற்றும் வழக்கம் போல் மூவரும் மது அருந்திவிட்டுப் பேசிக் கொண்டிருந்தபோது, ஆகாஷ் மீண்டும் விமல்ராஜைச் 'செல்போன் திருடன்' எனக் கூறியதுடன், அவரது தாயையும் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விமல்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள், வீட்டில் வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்துக்கொண்டு சென்று, சாலையில் நடந்து சென்ற ஆகாஷைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு நண்பரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனையே இளைஞர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நம்பிக்கையை தகர்த்திருக்கிறது” : ஜவாஹிருல்லா!
-
Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? : காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
கட்டுமானப் பொருள்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு? - தமிழ்நாடு அரசுக்கு பெ.சண்முகம் முன்வைத்த அறிவுறுத்தல்!
-
தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக... பிறந்தது நீதிக்கட்சி! : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்ப... தொடரும் பொய் வழக்குகள்! : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!