Tamilnadu

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எப்படி பாதியில் கைவிட முடியும்? : த.வெ.க அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் கொண்டு வரப்படும் என்று தி.மு.க அரசு அறிவித்தது. நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. விமான நிலையம் அமைப்பதற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் த.வெ.க ஆட்சி அமைந்தவுடன், இத்திட்டம் கைவிடப்பட்டதாக விதி 110 -ன் கீழ், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, விமான நிலையம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.கவுதமன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி முன்பு விசாரணைக்கு வந்தது.

‘’பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடும் முடிவு தன்னிச்சையானது என்றும் அரசியலமைப்பு சட்டத்தின் 14 வது பிரிவுக்கு எதிரானது என்றும் அப்போது வாதிடப்பட்டது.

விசாரணையின் போது தலைமை நீதிபதி தர்மாதிகாரி, ‘’பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையப்படுத்தி விட்டு, இழப்பீடும் வழங்கிய பிறகு ஒரு மிகப்பெரிய திட்டத்தைப் பாதியிலேயே எப்படி கைவிட முடியும்? அரசுகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப விமான நிலையத் திட்டங்களை அமைக்கவோ, கைவிடவோ முடியாது’’ என்றார்.

’’திட்டத்திற்கான சாத்தியக்கூறு, நில ஆய்வு, தொழிநுட்ப ஆய்வுகள் உள்ளிட்டவை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பிறகு, தற்போது அந்த இடம் பொருத்தமற்றது என்று கூறுவது எப்படி?’’ என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தமிழக அரசின் சார்பில் முன் வைத்த விளக்கத்தில், ‘’நீர் நிலைகள் , விவசாய நிலங்கள் உள்ளன. சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் பிரச்னை ஏற்படும். எனவே விமான நிலையம் அமைக்க பரந்தூர் இடம் பொருத்தமானது அல்ல’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசு, TIDCO, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், நான்கு வாரங்களுக்கு பிறகு வழக்கை விசாரிக்க தள்ளி வைத்தது. இனி, என்ன சொல்லப்போகிறது த.வெ.க அரசு?

Also Read: பெரியார் நூலக விவகாரம் - பொய் சொன்ன ராஜ்மோகன் மன்னிப்பு கேட்க வேண்டும் : DMK IT Wing வலியுறுத்தல்!