Tamilnadu

புதிய பாதை இல்ல... விஜய் காட்டுவது ‘புதிய போதை’... - பட்டியலோடு சரமாரியாக விமர்சித்த திமுக இளைஞரணி!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே குற்றச்சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதோடு, தமிழ்நாடும் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், இதுவரை தமிழ்நாடு கண்டிராத தொடர் குழந்தைகள் மாயம், போதை பொருட்கள் விநியோகம் என அடுத்தடுத்து குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

தவெக அமைச்சர் சரத் பொதுவெளியில் பௌடர் பயன்படுத்தியது தொடர்பான வீடியோ வைரலானது முதல், தவெக-வினர் போதை பொருள் விற்பனை செய்தது வரை அனைத்து குற்றங்களிலும் தவெக-வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு புறம் போதை பொருளை பயன்படுத்த கூடாது என்று விழிப்புணர்வு வழங்கிய விஜய், மறுபுறம் தனது கட்சியினரை வைத்தே போதை பொருள் விநியோகம் செய்து வருவதாக இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

இப்படியான சூழலில் நேற்று (நவ.19) சென்னை மாதவரத்தில் ஐஸ்கிரீம் வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 71.24 கிலோ ஹெராயினை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) பறிமுதல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு ”2026-ஆம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பறிமுதல் இதுவே என்று”, சென்னையில் பிடிபட்ட 71.24 கிலோ ஹெராயின் பறிமுதலைச் சுட்டிக்காட்டி ஒன்றிய அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழ்நாட்டிற்கு பெரும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து திமுக இளைஞரணி விமர்சன பதிவு ஒன்றாய் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு : -

சென்னை மாதவரத்தில் ஐஸ்கிரீம் வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 71.24 கிலோ ஹெராயினை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) பறிமுதல் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சர்வதேசச் சந்தையில் ரூ.700 கோடி மதிப்புள்ள இந்தப் போதைப்பொருள் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே நாகப்பட்டினத்தில் 137 கிலோ மெத்தாம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு சர்வதேசக் கடத்தல் கும்பல்களின் வழித்தடமாக மாறுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஒருபுறம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு; மறுபுறம் அதனைத் தடுப்பதில் நிர்வாகத்தின் மெத்தனம். இதற்கிடையில், ஐ.பி.எல் மைதானத்தில் அமைச்சர் சரத் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளி வெளியாகி, அவர் அளித்த விளக்கமும் விவாதப் பொருளானது.

போதைப்பொருளைக் கட்டுப்படுத்த வேண்டிய அமைச்சர்கள் மீதும், மக்களிடம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் மீதும் சர்ச்சைகள் எழுந்தால் நிர்வாகத்தின் நம்பகத்தன்மைதான் என்ன? இந்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசின் பங்கே இல்லை என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டியதாகிறது.

மேலும், கடந்த கழக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்த த.வெ.க தலைவர் விஜய், தன் ஆட்சியில் அடுத்தடுத்து போதைப்பொருட்கள் கைப்பற்றுவது குறித்தும், அதில் தன் கட்சி நிர்வாகியே சம்பந்தப்பட்டிருப்பது பற்றியும் தமிழ்நாடு காவல்துறை கோட்டைவிட்ட நிலையில், ஒன்றிய அரசின் அமைப்புகள் போதைப்பொருளைக் கைப்பற்றுவது குறித்தும் வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன்?

‘புதிய கீதை’ என்னும் மொக்கை படத்தில் நடித்த நடிகர் விஜய், ஏதோ தமிழ்நாட்டு அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் புதிய பாதையைக் காட்டப்போகிறார் என்று மக்கள் ஏமாந்து வாக்களித்துவிட்டார்கள். விஜய் தலைமையிலான த.வெ.க அரசு புதிய பாதையைக் காட்டாவிட்டாலும் பரவாயில்லை, தமிழ்நாட்டை ‘புதிய போதை’ மாநிலமாக மாற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Also Read: பெரியார் நூலக விவகாரம் - பொய் சொன்ன ராஜ்மோகன் மன்னிப்பு கேட்க வேண்டும் : DMK IT Wing வலியுறுத்தல்!