Tamilnadu
Tanishq கொள்ளை : முகமூடி, டாட்டூவால் சந்தகமடைந்த போலீஸ்... இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி சிக்கியது எப்படி?
மதுரை பைபாஸ் சாலையில் கடந்த அக்டோபர் மாதம் தனிஷ்க் நகைக்கடை திறக்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த நவ.12-ம் தேதி அதிகாலை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், அந்த கடையில் இருந்து சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான 15 கிலோ நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். கடையை திறந்த ஊழியர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அங்கிருந்த சிசிடிவி, அருகில் இருந்த சிசிடிவி உள்ளிட்டவைகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையனின் கையில் இருந்த டாட்டூவையும், கொள்ளையடிக்க பயன்படுத்திய நம்பர் பிளேட் இல்லாத ஸ்கூட்டரையும் வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
மேலும் கொள்ளை சம்வத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் தொப்பியுடன் இளைஞர் ஒருவர் கடையை நோட்டமிட்டதை கண்டறிந்த போலீசார், இந்த கொள்ளை சம்பவத்தில் நிஷாந்த் என்ற இளைஞர் ஈடுபட்டது தெரிந்துகொண்டனர்.
இதையடுத்து நிஷாந்தை தேடி சென்ற போலீசார், அவர் தலைமறைவானதை அறிந்துகொண்ட நிலையில், அவரது தந்தையை விசாரித்தனர். அப்போது நிஷாந்த், தான் கொள்ளையடித்த நகைகளை, தனது தந்தை சுரேஷிடம் கொடுத்து மறைத்து வைக்க சொன்னது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து நிஷாந்தின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
மேலும் நிஷாந்தின் சமூக ஊடகத்தை ஆய்வு செய்ததில், அவர் இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியுடன் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து நிஷாந்தின் தோழியும், பிரபல இன்ஸ்டா Influencer-மான மீனாட்சியிடம் (meenakshi_nachiyar) போலீசார் விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக மீனாட்சி அளித்த பதிலால் போலீசாரின் சந்தேகம் வலுவடைந்தது. இதைத்தொடர்ந்து மீனாட்சியும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மீனாட்சி, புதிதாக கட்டும் வீட்டுக்கு பணம் இல்லாததையும், பல லட்சம் கடன் இருப்பதாகவும் தனது நண்பர் நிஷாந்திடம் கூறி புலம்பியுள்ளார். இதனால் நகைக்கடையில் கொள்ளையடிக்க நிஷாந்த் ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கொள்ளையடிக்க மீனாட்சியும் தனது ஸ்கூட்டியை கொடுக்கவே, அதனை கொண்டு சென்று கொள்ளை சம்பவத்தில் நிஷாந்த் ஈடுபட்டுள்ளார்.
அதோடு திட்டப்படி நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்காக கடந்த 5-ம் தேதியன்று தனிஷ்க் நகைக்கடையில் மேலே அமைக்கப்பட்ட இரும்பு சாரத்தின் மூலமாக சென்று அங்கு லிப்டின் அருகே அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய அவசரகால வழியில் இருந்த இரும்பு வேலியை அகற்றிவிட்டு அதற்குள் உள்ளே புகுந்து சென்று டெமோ பார்த்துள்ளார். அதன்பின்னரே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் நிஷாந்த் சிறிய சிறிய திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததும், தற்போது காதலிக்காக மிகப்பெரிய அளவிலான கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மீனாட்சியிடம் நடைபெற்ற விசாரணையின் மூலம் வயல்வெளியில் சாக்குப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை போலீசார் மீட்டனர்.
தற்போது இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி மற்றும் அவரது காதலன் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவருக்கும் 29-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்ட நிலையில், இருவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள நிஷாந்தையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Also Read
-
“21-ஆம் நூற்றாண்டின் உத்தமர் இவர்தான்” : த.வெ.க அமைச்சருக்குப் பதிலடி கொடுத்த எ.வ.வேலு!
-
கடலூர் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 5 பெண்கள் மாயம்… சிங்கப்பெண் படை என்ன செய்து கொண்டு இருக்கிறது?
-
சென்னை to கேரளம்.. முகக்கவசம், 600 CCTV.. மூதாட்டியிடம் திருடிய நகைகளால் வள்ளலான நடிகர் சிக்கியது எப்படி?
-
8 ரூபாய் கேக் பாக்கெட்டுக்கா இவ்வளவு பீடிகை : அமைச்சர் ராஜ்மோகனுக்கு தி.மு.க பதிலடி!
-
“காவல் நிலையங்களில் தொடரும் மரணங்களுக்கு Dummy CM பதில் அளிக்க வேண்டும்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!