Tamilnadu
பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தவெகவைச் சேர்ந்தவரின் கொடூரச் செயல்: வாக்குமூலத்தில் பகீர் தகவல்!
தவெக ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், கொலை, கொள்ளை, சிறுமிகள் கடத்தல், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தல் எனப் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவற்றில் பல்வேறு சம்பவங்களில் தவெகவைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகளாக இருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சேலத்தில் பள்ளிச் சிறுமிகளுக்குத் தவெகவைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதியரின் 11 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இச்சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஐயனார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில், ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு கடந்த ஒரு மாத காலமாக ஐயனார் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், புகார் அளித்த சிறுமி மட்டுமின்றி, அதே பள்ளியில் பயிலும் பல சிறுமிகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐயனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஐயனார் தவெக கட்சியைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் தவெகவுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்ட ஐயனார் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் குறித்த தகவல்களை காவல்துறையினர் தெரிவிக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட ஐயனாரிடம் மேற்கொண்ட விசாரணையில், தன்னுடன் சேர்ந்து மேலும் மூன்று பேர் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்தக் கும்பல் யார் யாருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது என்பதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில், தவெகவினரால் பள்ளிச் சிறுமிகளுக்குக்கூட பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
“மேகதாது அணை விவகாரம்; அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்” : CM விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
‘தமிழ்நாடு’ என்ற பெயர்.. தி.மு.க ஆற்றிய பங்கு.. வரலாற்றை திரிப்பதா? : முரசொலி தலையங்கம் சீற்றம்!
-
இது ரியல் ஆட்சி அல்ல… ரீல்ஸ் ஆட்சி… த.வெ.க அரசுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி மதிப்பெண்!
-
“இவரது தீர்ப்பால்தான் மணிப்பூர் கலவரமே வெடித்தது.. அப்படிப்பட்டவரை நியமிப்பதா?”- தவெக-வுக்கு CPI கண்டனம்!
-
“மாணவர்களை கல்வி உதவிக்காக இப்படி கெஞ்சவிடுவது நியாயமா?” : த.வெ.க அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கண்டனம்!