Tamilnadu

கடலூர் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 5 பெண்கள் மாயம்… சிங்கப்பெண் படை என்ன செய்து கொண்டு இருக்கிறது?

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 பெண்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயமானவர்களில் இரண்டு பள்ளி மாணவிகளும் இரண்டு கல்லூரி மாணவிகளும் அடங்குவர்.

பரங்கிப்பேட்டை, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம், விருதாசலம் ஆகிய பகுதிகளில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன.

பரங்கிப்பேட்டை : கரிக்குப்பம் கீழத்தெருவைச் சேர்ந்த அறிவழகனின் மகள் அஸ்வினி (வயது 21). இவர், கடந்த நவம்பர் 11 ஆம் தேதி மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக பரங்கிப்பேட்டை சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை.

குள்ளஞ்சாவடி : பள்ளிநீரோடை கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணியின் மகள் ஜெனி (19) கடந்த நவம்பர் 11 ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

குறிஞ்சிப்பாடி : மீனாட்சிப்பேட்டையைச் சேர்ந்த வேல்முருகனின் மகள் மதுமிதா (18), கல்லூரிக்கு சென்ற நிலையில் மாயமாகியுள்ளார்.

நெல்லிக்குப்பம்: பண்ருட்டி அருகே எதனூர் கிராமத்தைச் சேர்ந்த புனிதாவின் மகள் யாழினி (14), பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நவம்பர் 10 ஆம் தேதி நெல்லிக்குப்பம் அரசு மகளிர் மேல்நிலைபள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

விருதாசலம் : இந்தப் பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 7 ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவர், வீட்டுக்கு திரும்பி வராமல் மாயமாகியிருக்கிறார்.

இதற்கிடையே, பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் பல இடங்களில் பல வழிகளில் தேடியும் 5 பேரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் சம்பந்தப்பட்டக் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்துள்ளார்கள்.

இதையடுத்து, பரங்கிப்பேட்டை, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம், விருதாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 5 பெண்களையும் தேடி வருகிறார்கள்.

ஒரே வாரத்தில் ஒரே மாவட்டத்தில் 5 பெண்கள் காணாமல் போன சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் பாதுகாப்பு என்பது வெறும் அறிவிப்புகளிலும் மேடைப்பேச்சுகளிலும் முடிந்துவிடக்கூடாது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாகச் சென்று திரும்பவற்கான சூழலை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. பெண்களின் பாதுகாப்புக்காக த.வெ.க அரசு கொண்டு வந்த சிங்கப்பெண் படை என்ன செய்து கொண்டு இருக்கிறது?

Also Read: சென்னை to கேரளம்.. முகக்கவசம், 600 CCTV.. மூதாட்டியிடம் திருடிய நகைகளால் வள்ளலான நடிகர் சிக்கியது எப்படி?