Tamilnadu

தீபாவளிப் பயணம் வேதனைப் பயணம்.. சொந்த ஊருக்கு செல்வோரை திண்டாட வைத்த த.வெ.க அரசு!

சொந்த ஊர்களுக்கு சந்தோஷமாகப் புறப்பட்ட, சென்னை மக்களின் தீபாவளிப் பயணம் இந்த ஆண்டு வேதனையைத்தான் கொடுத்துள்ளது. பண்டிகைக் காலப் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உருவாக்கப்பட்டது. ஆனால், லட்சகணக்கான மக்கள் சொந்த ஊர் செல்லும் நேரத்தில் பேருந்து நிலையத்தை அடைவதே பயணிகளுக்கு பெரும் சோதனையாக, சாதனையாக இருக்கிறது.

நவம்பர் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை 15,659 பேருந்துகள் இயக்கப்படும் என்று த.வெ.க அரசு அறிவித்தது. இதில் 7,427 சிறப்பு பேருந்துகளும், தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்ட 1,659 பேருந்துகளும் அடங்கும்.

இத்தனை பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று அறிவித்த த.வெ.க அரசு, பேருந்து நிலையத்துக்கு சென்னைக்குள் இருந்து செல்லும் மக்களுக்கு போதிய வசதிகளை செய்ய தவறிவிட்டது. கிளாம்பாக்கத்தை அடைய போதிய மாநகர பேருந்துகள் இல்லாததால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதற்கிடையில், சென்னை டூ செங்கல்பட்டு செல்லும் சாலையில், டூ வீலர், நான்கு சக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்த போதிய எண்ணிக்கையில் போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் வாகனங்கள் ஊர்ந்து தான் செல்ல முடிகிறது. தாம்பரம் டூ கிளாம்பாக்கத்துக்கு இடையே இருக்கும் 9 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது.

எப்படியோ தட்டுத்தடுமாறி கிளாம்பாக்கம் சென்றால், அங்கு எந்த பேருந்து? எந்த நடைமேடையில் நிற்கிறது? என்பது குறித்து முறையான அறிவிப்பு இல்லாததால் பயணிகள் பெரும் குழப்பம் அடைந்து அங்கும் இங்கும் அலைய வேண்டியது உள்ளது.

தாங்களின் முன்பதிவு பேருந்து எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது, உலக நாடுகளை கண்டுபிடிக்க கோலம்பஸ் பட்ட கஷ்டத்தை விட, மோசமாக இருக்கிறது. பேருந்துகளை, நடைமேடைக்கு கொண்டு வருவதற்குள், பேருந்து டிரைவர்கள் படாதபாடு பட்டு டயர்டு ஆகி விடுகின்றனர்.

இதற்கிடையில்,வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் அருகில் உள்ள காலநிலைப் பூங்கா பகுதில் இருந்தும் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை செல்லும் பேருந்துகள் மறைமலை நகரில் இருந்து இயக்கப்படுகின்றன. இதற்கு இணைப்பு பஸ்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் பயணிகள் பட்ட வேதனையை சொல்லிமாளாது.

கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததால் அங்கும், பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளை பிடிக்க வேதனையுடன் பல மணி நேரம் காத்திருந்தனர். அவ்வப்போது வந்த சில பேருந்துகளில் பயணிகள் முண்டி அடித்து ஏறினர்.

பேருந்து நிலையம் பக்காவாக இருந்தும், முறையான திட்டமிடல், கண்காணிப்பு, வழிகாட்டுதல் இல்லாததால் சொந்த ஊருக்கு செல்லும் இந்த தீபாவளி பயணம், மீண்டும் சென்னையில் வீட்டுக்கே திரும்பி விடமாலா? என்ற கேள்வியை மனதுக்குள் கொண்டு வந்து விடுகிறது.

தீபாவளிப் பயணம் மகிழ்ச்சிப் பயணமாக இல்லாமல், நெரிசலும் அலைச்சலும் நிறைந்த வேதனைப் பயணமாக த.வெ.க அரசு மாற்றிவிட்டது.

Also Read: வெட்டி ஒட்டிய அட்ரெஸ் ; பொய் மேல் பொய் பரப்பி வரும் தரங்கெட்ட தவெக தற்குறிகள் - தி.மு.க ஐடி விங் பதிலடி!